பக்கம்:மணி பல்லவம் 5.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

946

மணிபல்லவம்

கரை சேர எவ்வளவு காலமாகுமோ? விசாகையைப்போல் நான் தனியாகவே நடத்த முடியாமல் போய்விட்ட பயணம் அது. இனிமேல் அதற்காகக் கவலைப்பட்டும் பயனில்லை. நன்றாக விடுபட வேண்டுமானால் நன்றாகக் கட்டுண்டுதான் தீரவேண்டுமென்று அருட்செல்வ முனிவர் அன்றொரு நாள் சிரித்தபடியே என்னிடம் கூறிவிட்டுப் போனார். அந்த சில வார்த்தைகளுக்குள் இவ்வளவு பெரிய விளைவுகள் அடங்கியிருக்குமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை. உன்னை ஏற்றுக் கொண்டதோடு என் பாசங்கள் முடிந்து விடவில்லை. இனிமேல்தான் ஒவ்வொரு பாசமாகத் தொடரப்போகிறது, என் தாய்மாமன் மகனான குலபதி மணிநாகபுரத்தில் எனக்காகவே என்னை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பான். நாமும் அங்கே போய்த்தான் இனிமேல் வாழப் போகிறோம். நம்முடைய வாழ்க்கையைப் பார்த்தே இனி அவன் தன்னுடைய பழைய துக்கங்களை எல்லாம் மறந்து விடுவான்....” என்று கூறி நெட்டுயிர்த்தான் இளங்குமரன்.

கடலில் அலைகள் கரிந்து சரிந்து மீண்டுகொண்டிருந்தன. பூம்புகார் தொலைவில் மங்கியது. அதன் சதுக்க நினைவுகள் அவர்கள் மனங்களில் தங்கின. தன்னருகே கரையைப் பார்த்தபடி கண் கலங்கி நின்று கொண்டிருந்த சுரமஞ்சரியை நோக்கிச் சிரித்தான் இளங்குமரன்.

அவனுடைய அந்தப் பார்வை அவளை மணப் பெண்ணாக அலங்கரிக்கத் தொடங்கியது. அதற்கு நாணி நிமிர்ந்தும் நிமிராமலும் நளினமாகத் தலையைச் சாய்த்து கடைக்கண்களால் அவனைக் காண முயன்றாள் அவள்.

அவள் அப்படிப் பார்க்க முயன்ற முகம் எதுவோ அதிலிருந்து அவளுடைய வாழ்க்கை பிறந்தது. அவனுடைய கண்பார்வையினால் அவள் மலர்ந்து நின்றாள். பின்பு அந்த மலர்ச்சி வாடவே இல்லை. அப்படியே நெடுங்காலத்துக்கு வாழ்கின்ற நித்தியமான மலர்ச்சியாய் அது வளர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/164&oldid=1200004" இலிருந்து மீள்விக்கப்பட்டது