பக்கம்:மணி பல்லவம் 5.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

951

தன் மனைவி மக்களை உடனழைத்துக் கொண்டு அவன் அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறியபோது, “சுரமஞ்சரி நாம் திரும்பவும் இன்றே மணிநாகபுரத்துக்குக் கப்பலேறி விடுவோம். இவ்வளவு காலத்துக்குப் பின்பு இந்த நகரத்துக்கு நாம் புறப்பட்டு வந்த வேளை நல்ல வேளையில்லை போலிருக்கிறது” என்று மனைவியிடம் கூறினான்.

“ஏன்?” என்று அவன் மனைவி சுரமஞ்சரி திகைத்துப் போய் அவனைக் கேட்டாள்.

“உனக்கு இவளைத் தெரிகிறதா சுரமஞ்சரி?” என்று பதிலுக்குத் தன் மனைவியைக் கேட்டான் அவன்.

அவள் ஒன்றும் புரியாமல் விழித்தாள்.

“நாற்பது ஆண்டுகளுக்கு முன் இந்த நகரின் புறவீதியில் ஒரு காலை வேளையில் நீயும் நானும் காவிரிக்கு நீராடப் போய்க்கொண்டிருந்தபோது தன்னுடைய கோலத்தை முடிக்கத் தெரியவில்லை என்று அழுது கொண்டு ஓடினாளே; அவளுடைய புதுக்கோலம் இது.”

“பாவம்! இத்தனை காலத்துக்குப் பின்னும் அவளுடைய மன நெருப்பு ஆறவில்லை போலிருக்கிறது” என்ற சுரமஞ்சரியும் அவனோடு சேர்ந்துகொண்டு அந்தப் பெண்ணுக்காக அநுதாபப்பட்டாள்.

ஆனால் மற்றொரு புறம் அவனுக்கு முன் தன் நாவற் கிளையைத் தானே சாய்த்த அந்தப் பேதைப் பெண்ணோ நாளங்காடியின் ஒரு மூலையில் யாருமில்லாததொரு மரத்தடியில் போய் கண்ணீர் பெருக வீற்றிருந்தாள்.

அவளுடைய துயரத்துக்கு முடிவு ஏது! பாவம்! காலம் அதை ஆறச் செய்யட்டும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/169&oldid=1231898" இலிருந்து மீள்விக்கப்பட்டது