பக்கம்:மணி பல்லவம் 5.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

801

உன்னை மணிபல்லவத்துக்கு அழைத்தபோதே, நீ இங்கு வந்திருந்தால் நம்முடைய குலபதிக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும். அப்போது நீ வராததனால் நான் மட்டும் தனியாக இந்தத் தீவுக்கு வந்திருந்தேன். குலபதியையும் அவனுக்கு மிகவும் வேண்டியவராகிய மற்றொருவரையும் இங்கே சந்தித்தேன். அப்படிச் சந்தித்தபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைச் சொற்களில் அடக்க முடியாது. அதே மகிழ்ச்சியை இன்னும் சிறிது நேரத்தில் நீயும் அடையப் போகிறாய்.”

இப்படிப் பேசிக்கொண்டே அவர்கள் மாளிகையின் நடுக்கூடத்தை அடைந்திருந்தார்கள். தளத்தில் எங்கு நோக்கினும் முத்தும், மணியும், பவழமுமாகப் பதித்திருந்ததனால் அந்த மாளிகையின் ஒவ்வொரு அணுவிலும் அது ஒர் இரத்தின வணிகருடையது என்பதை நினைவூட்டும் அழகு அமைந்திருந்தது. இரத்தின வாணிகன் குலபதியைப் பற்றியும், மணிநாகபுரத்தில் அவனுக்குள்ள பெருமை களைப் பற்றியுமே, வளநாடுடையார் விவரித்துச் சொல்லிக் கொண்டு வந்தாரே ஒழிய இன்ன வகையில் அவனுக்கும் தனக்கும் நட்பு ஏற்பட்டது என்றோ, அவன் இன்னான் என்றோ விவரமாகக் கூறவில்லை. குலபதியின் அந்த மாளிகையைச் சுற்றிப் பார்த்தபோது தன்னோடு மணி மார்பனும் அங்கு வந்திருக்க வேண்டும் என்று அதன் அழகுகளை நோக்கிக்கொண்டே எண்ணினான் இளங்குமரன். ஒர் ஒவியன் தன்னுடைய கண்கள் நிறையக் கண்டு மகிழ வேண்டிய பேரெழில் மாளிகையாயிருந்தது அது. மணிமார்பன் தன் உடனில்லையே என்பதை ஒவ்வொரு கணமும் இளங்குமரன் அங்கு உணர முடிந்தது.

அந்த மாளிகையின் முற்றத்தில் உள்ள பூங்காவிலிருந்தே நாகதெய்வக் கோட்டத்துக்குள் போவதற்கான வழி ஒன்றும் அமைந்திருந்தது. இளங்குமரனும், வளநாடுடையாரும் நீராடித் துய்மை பெற்ற பின் அவர்களை நாகதெய்வ வழிபாட்டுக்கு அழைத்துக்கொண்டு போனான் குலபதி, அந்த வழிபாட்டை முடித்துக் கொண்டு

ம-51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/19&oldid=1231677" இலிருந்து மீள்விக்கப்பட்டது