பக்கம்:மணி பல்லவம் 5.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

803

கின்றன. இந்த மாளிகையின் ஓவிய மாடத்தில் ஓவியங்களாக இருப்பவர்களில் ஒருவர்கூட இந்தத் தீவின் எல்லையில் இறந்ததில்லை. துயரம் நிறைந்த வாழ்க்கையின் பழைய தலைமுறை நினைவுகளையும், பழையவர்கள் சேர்த்து வைத்த செல்வத்தையும் நுகர்ந்துகொண்டு இந்தக் குடிசையின் கடைசித் தளிராக நான் மட்டும்தான் மீதமிருக்கிறேன். உங்களைப் போன்ற ஞானிகள் அந்த ஓவிய மாடத்தைப் பார்ப்பதானால் எனக்கு ஏதேனும் புதிய நற்பயன் நேரலாமோ என்னவோ?"என்று குலபதி கூறும்போது அவனுடைய இனிமையான குரல் நலிந்திருந்தது. சொற்கள் துயரந் தோய்ந்து பிறந்தன.

“ஐயா! நீங்கள் உங்களை அறியாமலே மிகப்பெரிய தவறு செய்துவிட்டீர்களே! சற்று முன்பு எங்களைப் பின்பற்றித் தன் மனைவியோடு இந்த வீதியில் வந்தாரே; அவர் பாண்டிய நாட்டின் சிறந்த ஓவியர். உங்கள் ஓவிய மாடத்தை அவர் பார்ப்பதானால் எவ்வளவோ நன்மைகள் ஏற்படும். அவரை ஊர் சுற்றிப் பார்க்க அனுப்புமுன் இங்கே அழைத்து வந்து உங்கள் ஓவிய மாடத்தைக் காண்பித்திருந்தால் நான் மகிழ்ச்சி கொண்டிருப்பேன். இந்தக் கலை விருந்தை உண்பதற்கு ஏற்றவன் நான் இல்லை. அந்த ஓவியர்தான்! அவரை வீதியிலிருந்தே, இந்த மாளிகைக்குள் அழைக்காமல் அனுப்பிவிட்டு இப்போது என்னை மட்டும் உங்கள் ஓவிய மாடத்துக்கு அழைக்கிறீர்களே?” என்று கேட்டான் இளங்குமரன்.

அவனுடைய இந்தக் கேள்வியைச் சிரித்தவாறே ஏற்றுக்கொண்ட குலபதி, “விருந்தை உண்பதற்கு ஏற்றவர் யார் எனத் தீர்மானம் செய்ய வேண்டிய பொறுப்பு விருந்திடுகிறவனுக்கு உண்டாயின், நான் உங்களை மட்டுமே இதற்குத் தேர்ந்தெடுக்கிறேன்” என்று மறுமொழி பகர்ந்தான். குலபதியின் இந்த மறுமொழியே ஒருவிதத்தில் புரிந்தும் பலவிதத்தில் புரியாமலும், ஏதோ ஒரு புதிர் போலிருந்தது இளங்குமரனுக்கு.

“நம்முடைய குலபதி உன் கழுத்தில் முத்துமாலையை அணிந்தபோதே உன்னைத் தன்னுடைய நெருக்கமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/21&oldid=1231763" இலிருந்து மீள்விக்கப்பட்டது