பக்கம்:மணி பல்லவம் 5.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

812

மணிபல்லவம்

கூறுகிற வகையைச் சேர்ந்த வெற்றிகள் அவசியம் தானா?"-

“இன்று நீ என் முன்னால் இப்படி அழக்கூடாது இளங்குமரா! உன் வாழ்க்கையில் இது சிறந்த நாள். இன்று நீ மிகவும் மகிழ்ச்சியாயிருக்க வேண்டும். கடைசியாக நீயும் நானும் ஒருவரையொருவர் வளநாடுடையார் இல்லத்தில் சந்தித்துக்கொண்ட பழைய இந்திரவிழா நாளில் இரவை நீ மறந்திருக்க மாட்டாய் என்றெண்ணுகிறேன். அன்று நீ என்னிடம் தாங்க முடியாத தவிப்போடு எந்தக் கேள்வியைக் கேட்டாயோ அதே கேள்வியைத்தான் இப்போது வேறு சொற்களில் வேறு விதமாக அடக்க முடியாத அழுகையோடு கேட்கிறாய்! அறிவும், தத்துவஞானங்களுங்கூட மனிதனுடைய மனத்தில் ஆணிவேர் விட்டுப் பதிந்துவிட்ட பழைய துக்கத்தைப் போக்க முடியுமா என்ற சந்தேகம் உன் நிலையைப் பார்த்ததும் எனக்கு உண்டாகிறது!”

“அப்படியில்லை ஐயா! துக்கங்களுக்காக வாய்விட்டுக் குமுறாமல் மனத்திலேயே அழுதுவிடுவது என் வழக்கம். ஆனால் இறந்து போனதாக நம்பிவிட்ட உங்களை மீண்டும் உயிரோடு பார்த்தபோது நான் குழந்தையாகி விட்டேன். உங்கள் பாவனையில் நான் என்றும் குழந்தையாக இருப்பதாகத்தானே நீங்களும் சற்றுமுன் கூறினர்கள்? உயிரோடு உங்களைக் கண்டதும் எனக்கு அழுகை வருகிறது. எல்லையற்ற ஆனந்தத்தின் விளைவு அழுகை என்றுதானே ஞானிகள் சொல்கிறார்கள்:”

“ஞானிகள் அப்படிச் சொல்லியிருக்கலாம்! ஆனால் இனிமேல் உன்னுடைய வாழ்க்கையில் அழுகைக்கு இடமில்லை குழந்தாய்! இந்தக் கணம் முதல் உன்னுடைய மனமாகிய தேர்த் தட்டில் நான் ஏறி நின்றுகொண்டு உன்னைச் செலுத்தி வழிநடத்திக் கொண்டுபோக வேண்டிய காலம் வந்துவிட்டது. நீ மறுபடியும் கோபமும் குமுறலும், மானமும், கொதிப்பும் நிறைந்தவனாக மாறிக் கையில் வில்லை நாணேற்றிக் கொண்டு க்ஷத்திரியனாக நின்று என் வழியில் நடக்க வேண்டும்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/30&oldid=1231771" இலிருந்து மீள்விக்கப்பட்டது