பக்கம்:மணி பல்லவம் 5.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

814

மணிபல்லவம்

அவனுக்கு. கண்களை இமையாமல் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த அருட்செல்வ முனிவரை நோக்கிக் கூறலானான் இளங்குமரன்:

“சுவாமீ! மதம் பிடித்த யானையைப்போல் என்னுடைய இந்த இரண்டு கைகளுக்கும் நான் எதிர்ப்பை தேடிக்கொண்டு திரிந்த காலத்தில் எந்தச் செய்தியை உங்களிடம் பலமுறை தூண்டித் தூண்டிக் கேட்டேனோ அதை அப்போது சொல்வதற்கு மறுத்தும் மறைத்தும் என்னை ஏமாற்றிவிட்டு, உணர்வுகளாலும், இலட்சியத்தாலும் நான் மாறிவிட்ட இந்தக் காலத்தில் இப்போது இப்படி அதைச் சொல்வதற்கு முன்வருகிறீர்களே?”

அருட்செல்வரிடம் இப்படி இந்தக் கேள்வியைக் கேட்டபோது கண்ணும் மனமும் கலங்கிய நிலையில் இளங்குமரன் வேதனைப்படுவதை அருகில் நின்ற வளநாடுடையாரும் குலபதியும் கவனித்தார்கள். இளங்குமரனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அருட்செல்வ முனிவர் தம்முடைய மறுமொழியால் போக்கினார். அந்த மறுமொழியை அவர் கூறும்போது அடக்கம் நிறைந்த அவருடைய இயல்பையும் மீறிக்கொண்டு அவர் பேசும் சொற்களில் கணத்திற்குக் கணம் ஆவேசம் வளர்வது புறப்பட்டது. தம்முடைய சொற்களின் மூலம் அவன் மனத்தில் ஏதோ ஒரு கனலைப் பற்ற வைப்பதற்கு முயன்றார் அவர்.

“இளங்குமரா! நீ உணர்ச்சி வசப்பட்ட விடலைப் பிள்ளையாகத் திரிந்துகொண்டிருந்த காலத்தில் உன்னிடம் பல செய்திகளை நான் சொல்லாமல் மூடி மறைத்துக் கொண்டிருந்ததற்குக் காரணம் உண்டு. காவிரிப்பூம்பட்டினத்திலே நான் உன்னை வளர்த்து ஆளாக்கியபோது உன்னையும், என்னையும் அழித்து விடுவதற்கு ஒவ்வொரு கணமும் சூழ்ந்து கொண்டிருந்த பகைகளைப் பற்றி நீ அறிந்திருக்கமாட்டாய். அந்தக் காலத்தில் ஒற்றர்களைப் போல் உன்னையும், என்னையும் சுற்றித் திரிந்து கொண்டிருந்த பயங்கரமான மனிதர்களைப் பற்றியும் அறிந்திருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/32&oldid=1231773" இலிருந்து மீள்விக்கப்பட்டது