பக்கம்:மணி பல்லவம் 5.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

818

மணிபல்லவம்

தேனே — அன்று நான் உனக்குக் காட்ட நினைத்திருந்தது உன் தாயின் அருமையான ஓவியத்தையும், அவள் இறந்து போன இடத்தையும்தான். அவற்றை நீ பார்த்துவிட்டு உண்மையைப் புரிந்துகொண்டு ஆவேசமாயிருக்கும் சமயத்தில் இன்று உன்னுடைய உள்ளத்தில் நான் மூட்டுவதற்கு முயன்று கொண்டிருக்கிற இதே கனலை அன்றே மூட்டிவிட விரும்பியிருந்தேன். ஆனால் அன்றிரவில் நான் எதிர்பார்த்தபடி எதுவுமே நடக்கவில்லை. உன் தாயின் ஓவியம் ஒன்றும் அவள் சாவதற்கு முன்பு அணிந்திருந்த விலைவரம்பற்ற அணிகலன்கள் பலவும் நீ இன்ன குடியிலே இன்னாருக்கு மகனாகத் தோன்றியவன் என்பதை நினைவூட்டும் அடையாள மாலை ஒன்றும் பூம்புகாரில் ஓரிடத்தில் ஒரு கொடிய மனிதருடைய பாதுகாப்பில் ஒளிக்கப்பட்டுக் கிடக்கின்றன. அவை தன்னிடத்தில் ஒளிக்கப்பட்டுக் கிடப்பதை நான் ஒருவன் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறேன் என்பதும் அந்தக் கொடியவனுக்குத் தெரியும். உனக்கு நினைவு தெரிந்து நான் உன்னுடைய வளர்ப்புத் தந்தையே தவிர உன்னைப் பெற்ற தந்தையில்லை என்பதையும் நீ அறிந்துகொண்ட் பின் உன் பெற்றோரைப் பற்றி என்னிடம் கேட்டபோதெல்லாம் நான் அந்தக் கொடியவனிடம் போய் இரகசியமாக அவனைச் சந்தித்து உன் தாயின் ஓவியத்தையும் பிற பொருள்களையும் என்னிடம் கொடுத்துவிடுமாறு உன் சார்பாக மன்றாடிய போதெல்லாம் அவன் என் வேண்டுகோளுக்குச் சிறிதும் செவி சாய்க்கவில்லை. என்னை அலட்சியப்படுத்தினான். ஏளனம் செய்தான். பயமுறுத்தினான்.

இறுதி முறையாக நீயும் நானும் பிரிவதற்கு முந்திய இந்திர விழாவன்று முதல்நாள் காலையிலும் அந்தக் கொடியவனைச் சந்தித்து மன்றாடினேன். ‘இன்று நடு இரவுக்குமேல் சம்பாபதி வனத்து நாவல் மரத்தடியில் காத்திருந்தால் அவற்றை என் பணியாட்கள் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுவார்கள்’ என்று உறுதி கூறி அன்று என்னைத் திரும்பி அனுப்பியிருந்தான் அந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/36&oldid=1206674" இலிருந்து மீள்விக்கப்பட்டது