பக்கம்:மணி பல்லவம் 5.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

821

இத்தனை காலமாகத் தன்னைப் பெற்றவளைக் காண வேண்டுமென்று நிலைத்த ஏக்கமாக அடிமனத்தில் அழுந்திப் போயிருந்த இணையில்லாத பேருணர்வு இன்று இந்த ஒரே ஒரு கணத்தில் விசுவரூபமாய்ப் பெருகி மனத்தின் எல்லையெல்லாம் வியாபித்து நிற்க, இந்த ஒரு கணத்துக்காகவே இத்தனை நாளும் காத்துக் கொண்டிருந்ததைப் போலப் பரிவு பெருக இளங்குமரன் கண் மலர்ந்தான். எதிரே பார்த்தான். அந்தக் கணத்தை வாழ்த் தினான். அந்தக் கணத்துக்காகவே வாழ்ந்து கொண்டிருந்ததைப் போலவே வாழ்த்தினான். அது அவன் சற்று முன்பு பார்த்திருந்த ஓவியம்தான்.

எந்த ஓவியத்தின் கண்களிலிருந்து நவரசங்களுக்குப் பதில் கருணை ஒன்றே பெருகி அவன் உள் உணர்வுகளை அன்பு வெள்ளத்தில் நனைத்ததோ, அதே ஓவியத்தை நோக்கி இப்போது அவனுடைய கண்களிலிருந்தும் கருணை பெருகிச் சுரந்து முதலில் பெருகிய கருணையோடு கலப்பதற்கு முந்துவதுபோலத் தவித்தது. காலத்தின் இயக்கத்தையே தடுத்து நிறுத்தி ஓடாமற் செய்துவிட்டாற் போன்ற நித்தியமான விநாடிகளாயிருந்தன. அவை. யார் யாரோ தன்னிடமிருந்து பெற்றுக்கொண்டு மகிழத் தவித்த அன்பையெல்லாம் அப்படித் தவித்தவர்களுக்கு அளிக்காமல் இந்த ஒற்றைக் கணத்துக்காகவே தான் சேர்த்துக் கொண்டு வந்ததுபோல் தோன்றியது அவனுக்கு, அப்போது அவனுக்கு ஏற்பட்டிருந்த பெருமிதத்திற்கு ஓர் அளவே இல்லை.

‘என்னுடைய தாய் தன் காலத்தில் தனது தலைமுறையிலேயே பேரழகு வாய்ந்தவளாக வாழ்ந்திருக்க வேண்டும். என்னுடைய தாயின் கண் பார்வையிலிருந்துதான் நவரசங்களுமே பிறந்ததாக யாரோ கவிபுணர்வு உள்ளவர்கள் இந்த ஓவியத்தின் கீழுள்ள ஏட்டில் எழுதியிருக்கிறார்கள். இந்த எழில் வாய்ந்த தாயின் கைகளில் நான் ஏதோ ஒரு காலத்தில் என் பிஞ்சுக் கால்களை உதைத்துக் கொண்டு மெல்லத் தவழ்ந்திருக்கிறேன். இந்த