பக்கம்:மணி பல்லவம் 5.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

822

மணிபல்லவம்

எழில் வாய்ந்த தாயின் கண்கள் பார்த்துப் பார்த்துப் பெருமைப்படும்படியாக நான் இவளுக்குக் குழந்தையாயிருந்திருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டே கண்களில் நீர் மல்க நின்ற அவனுக்குத் தன் தாயோடு தொடர்பு டைய வேறொரு ஞாபகமும் அப்போது வந்தது.

“நீங்கள் சான்றாண்மையாளராகப் புகழ் பெற்று நிற்பதை உங்கள் தாய் கண்டால் உங்களை ஈன்ற போதினும் பெருமகிழ்ச்சி அடைவாள்” என்று திருநாங்கூர்ப் பூம்பொழிலில் ஏதோ ஒரு நாள் காலை விசாகை கூறிய வார்த்தைகள் இந்தக் கணத்தில் அவனுக்கு நினைவு வந்தன. அத்தகைய பெரும் பாக்கியத்தைத் தன்னுடைய தாய்க்குத் தான் அளிக்க முடியாமல் போய்விட்டதை எண்ணியபோது மனத்தில் பொறுத்துக் கொள்ள முடியாத வேதனையை அடைந்தான் அவன்.

‘உன் மனத்தின் வலிமையை வளர்த்துக் கொள்வதற்கு நீ என்ன கற்றிருக்கிறாய்? என்று பல நாட்களுக்கு முன்பு இந்திர விகாரத்துத் துறவி தன்னைக் கேட்டபோது அவனது உள் மனத்திலிருந்து விழித்துப் பார்த்த அகக்கண் எதுவோ அந்த அகக்கண்ணிலேயே அவலம் கலங்கித் துயரம் மலிந்து கொண்டிருந்தது இப்போது.

“இவர் உன் தந்தை! இவரும் இப்போது இந்த உலகத்தில் இல்லை” என்று அந்த ஓவியத்தில் இருந்த வீர ஆடவரைச் சுட்டிக் காண்பித்தார் அருட்செல்வ முனிவர். அந்த ஓவியத்தைத் தன் கண்களால் பார்த்த முதல் கனத்திலேயே அதிலுள்ள காதலர்களை உமையாகவும், சிவனாகவும் பக்தி பாவித்துக் கொண்டு வணங்க வேண்டும் போலத் தனக்குத் தோன்றிய உணர்வை மீண்டும் இப்போது இளங்குமரன் எண்ணினான்.இப்படி எண்ணிய போது தன்னுடைய அகக்கண் இன்னும் நன்றாக மலர்ந்து அங்கே ஆன்மாவின் உணர்ச்சிக்கு மட்டுமே புலப்படக் கூடியதொரு துக்கமயமான சுக விளைவு பெருகுவதை இளங்குமரன் அனுபவித்தான். அந்தப் பரிபூரணமான அநுபவத்தில் அவன் மெய்மறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/40&oldid=1231778" இலிருந்து மீள்விக்கப்பட்டது