பக்கம்:மணி பல்லவம் 5.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

823

நின்றபோது வளநாடுடையார் அவன் அருகில் வந்து கூறலானார்.

“குலபதி உன்னுடைய தாய்மாமன் மகன் என்பதை இப்போது நீயாகவே புரிந்து கொண்டிருக்கலாம் இளங்குமரா! இந்தப் படத்திலிருக்கிற பெண் தன் தந்தையோடு உடன் பிறந்தவள் என்று சிறிது நேரத்துக்கு முன் குலபதியே உன்னிடம் கூறியிருந்ததை மறுபடியும் நீ இப்போதும் நினைத்துக்கொள். ‘இந்தக் குடும்பத்தின் புகழை உலகத்துக்குச் சொல்ல வேண்டிய சக்தி ஒன்று இதிலிருந்து தவறி எப்படியோ எங்கோ வெளியேறிப் போய்விட்டது! அதை மறுபடியும் கண்டுபிடித்து இங்கே சேர்க்கிற வரை எனக்கு இவ்வளவு செல்வமிருந்தும் நான் மனத்தினால் ஏழைதான்’ என்று இந்த ஒவிய மாடத்துக்குள்ளே நீ நுழைந்தபோது உன்னிடம் குலபதி வருத்தப்பட்டது யாருக்காகத் தெரியுமோ? உனக்காகத்தான்! நீதான் இந்தக் குடும்பத்தின் பெருமையைக் காப்பாற்றப் போகிற சக்தி என்று குலபதியும் அருட்செல்வ முனிவரும், நானும் எல்லோருமே நம்பிக் கொண்டிருக்கிறோம். அந்த நம்பிக்கைதான் சாவதற்கு முந்திய விநாடியில் உன் தாயின் மனத்திலும் தோன்றியிருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. நீதான் எங்களுடைய நம்பிக்கைகளைக் காப்பாற்ற வேண்டும்.”

“ஐயா! இந்த உறவுகளையும் பற்றுதல்களையும் புரிந்து கொள்ளும் போதில் எனக்குப் பெருமையாக இருப்பதைப் போலவே தயக்கமாகவும் இருக்கிறது. இந்த உறவுகளை அங்கீகரித்துக் கொள்வதன் மூலமாகவே நான் வேறெந்த மனிதர்கள் மேலாவது உறவு மாறி வைரமும் பகைமையும் கொள்ள நேருமோ என்று எண்ணிக் கலங்குகிறேன்.”

“இனிமேல் கலங்கிப் பயனில்லை குழந்தாய்! இதோ இந்தச் சுவடிகளைப் பார். சக்கரவாளக் கோட்டத்துத் தவச்சாலையில் வசிக்கும்போது இவற்றை என் கையில் வைத்து நான் எழுத்தாணியால் கீறிக்கொண்டிருந்த பல சந்தர்ப்பங்களில் நீ இவற்றையும் என்னையும் சேர்த்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/41&oldid=1231779" இலிருந்து மீள்விக்கப்பட்டது