பக்கம்:மணி பல்லவம் 5.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

787

முடிவதில்லை. ஆசைகளுக்கு நடுவிலும் ஆசைகளால் குறைந்து நிற்கும் வாழ்வே பண்புகளால் நிறைந்து நிற்கிறது. குறைவில்லாத வாழ்வு எதுவோ அதுவே நிறை வாழ்வு. அந்த வாழ்வுக்கு திரு நிறைந்த மனம் வேண்டும். அது இளங்குமரனுக்கு வாய்த்திருந்தது. குறைகளை முடிக்கத் தவித்துத் தவித்து அதற்காக மனத்தில் எழும் முனைப்பே ஆசை, பற்று, விருப்பம் எல்லாம். ஆசைகள் தேவையில் தொடங்கிக் குறைகளாலே வளர்ந்து துன்பங்களோடு முடிகின்றன. நெடுநாட்களாய் மண்ணில் கிடக்கிற கல்லைப் புரட்டினால் அதன் மறுபுறம் தேளும் பாம்பும், பூரானும் போன்ற நச்சுப் பிராணிகள் இருப்பதை ஒப்ப ஆசைகள் மறுபுறத்தைப் புரட்டிப் பார்த்தால் அந்த மறுபுறத்தில் எத்தனையோ துன்பங்கள் தெரிகின்றன. எனவே ஆசைகள் நிறைந்த வாழ்வை நிறைவாழ்வு என்று இளங்குமரன் நம்பவில்லை.

எல்லையற்ற திருநிறைந்த மனம், திருநிறைந்த எண்ணங்கள் ‘உலகமே அன்பு மயமானது - அந்த அன்பே இன்பமயமானது’ என்ற பாவனையுடன் வாழ்தல், இவையே நிறை வாழ்வு என்று நம்பினான் அவன். தன் வாழ்க்கையின் நம்பிக்கைகள் நிறைந்த வேளையில் மங்கல மான சுப சகுனங்களோடு மணிநாகபுரத்து மண்ணில் இறங்கி நின்ற இளங்குமரன் நிறைக! நிறைக!’ என்று விசாகை தன்னை வாழ்த்திய வாழ்த்துக்களை இப்படிப்பட்ட நிறைவாகவே பாவித்துக் கொண்டான். ஆசை களால் குறைந்து குணங்களால் நிறைந்த வாழ்வுக்கு அவன் ஆசைப்பட்டான்.

அந்த விநாடியில் அவன் மனம் இடைவிடாமல் ‘என் எண்ணங்களில் திரு நிறைய வேண்டும்’ என்று உருவேற்றிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு முறை ஆசைப்படும் போதும் மனம் ஒருவிதத்தில் எதற்காகவோ எரிந்து அழிந்து போகிறது. ஆசை என்பது என்றும் நிறைவில்லாத இயல்பையுடையது. நிறைந்த வாழ்வு வேண்டுமானால் நிறைவில்லாத இயல்புகளை நீக்கிவிட வேண்டும். மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/5&oldid=1231747" இலிருந்து மீள்விக்கப்பட்டது