பக்கம்:மணி பல்லவம் 5.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

834

மணிபல்லவம்

பிறந்து தொடங்கி ஒளிர்கிறது. இராமாயணம் முடிந்த பின்புதான் இராமனுடைய தரும வாழ்வைப் பற்றிய சிந்தனை தொடங்குகிறது. பாரதம் முடிந்த பின்புதான் பாண்டவர்களுடைய அறப்போரினது பெருமையைப் பற்றி எண்ணங்கள் பிறக்கின்றன. தன்னுடைய கதை எல்லை முடிந்த பின்பும் தன்னிலிருந்து பிறந்த சிந்தனை எல்லைக்கு முடிவே இல்லாமல் வளர்கிற புனிதமான காவியங்களைப் போல் நீங்கள் நிறைந்து நிற்க வேண்டும். இதுதான் திருநாங்கூரடிகளின் விருப்பம். என் விருப்பமும் இதுவே...” என்று விசாகை கூறியபோது இதைக் கேட்டுக் கொண்டிருந்த இளங்குமரனுக்கு மெய் சிலிர்த்தது. அவன் தன் கண்களை மூடிக் குருவை நினைத்துக் கொண்டான்.

“அதோ” என்று கிழக்கே காண்பித்தாள் விசாகை, இளங்குமரன் பார்த்தான். கீழ்த்திசை வெளுத்துக் கொண்டிருந்தது. இருவரும் எழுந்து நீராடப் புறப்பட்டனர். போது கழிந்ததே தெரியவில்லை.

கிழக்கே அடிவானத்தைக் கிளைத்துக் கொண்டு எழும் சிவப்புக் கோளத்தைப் பார்த்துக்கொண்டே “ஞாயிறு பிறந்துவிட்டது அம்மையாரே!” என்றான் இளங்குமரன்.

“கீழ்த்திசையில் மட்டுந்தானா! அல்லது உங்கள் மனத்திலுமா?” என்று கேட்டாள் விசாகை.

“மனத்திலும்தான். மனத்தில் சிறிது போது சூழ்ந்திருந்த இருளைப் போக்கி ஒளி கொடுத்தவர் நீங்கள். உங்களிடம் பேசிக் கொண்டிருந்த போதே இருள் விலகிப் பொழுது புலர்ந்துவிட்டது” என்று கூறியபடியே கண்களில் பயபக்தி மலர விசாகையைப் பார்த்தான் இளங்குமரன்.

“உங்கள் வாழ்க்கை காவியமாக நிறைய வேண்டும்” என்று இரண்டாம் முறையாக அதே வாக்கியத்தைப் பொய்யைச் சிதைக்கும் தூய்மைப் புன்முறுவலோடு மறுபடி அவனை நோக்கிக் கூறினாள் விசாகை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/52&oldid=1231787" இலிருந்து மீள்விக்கப்பட்டது