பக்கம்:மணி பல்லவம் 5.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



6. பிறந்த கதை

புத்த பீடிகை வணக்கமும், கோமுகிப் பொய்கைக் கரையில் தத்துவஞானிகளைச் சந்தித்துப் பேசுதலும், வைசாகப் பூர்ணிமையின் கோலாகலங்களில் கலந்து கொள்ளுதலுமாக அருட்செல்வ முனிவர் பிச்சை கொடுத்திருந்த அந்த ஒருநாளும் மெல்லக் கழிந்து போய்விட்டது, அன்று பகலில் மணிபல்லவத்து வீதிகளில் விசாகையும் புத்ததத்தரும் உடன்வர வளநாடுடையாரும் ஓவியனும் அவன் மனைவி பதுமையும் சூழ்ந்து துணையாகக் கொண்டு சுற்றியபோது இளங்குமரன் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த தத்துவ ஞானிகளையெல்லாம் சந்தித்தான். சிறிதும் பெரிதுமாக அலை எறியப் பெற்றும், அசையாமல் கலங்காமல் ‘நான் நிற்பதுதான் எனக்கு நிலையான உறுதி என்று நிற்கும் இந்தத் தீவைப்போல் அறிவின் பலமே பலமாக எதையும் தாங்கி நின்று சிரிக்கும் அந்தத் தத்துவ ஞானிகளைப் பார்த்தபோது இளங் குமரனுக்குப் பெரிதும் ஆறுதலாக இருந்தது. மனிதனுடைய மனத்தில் ஏற்படும் நோய்களுக்கு மருந்து வேறெங்கோ இருப்பதாகத் தேடித் தவித்துக்கொண்டிருப்பது பேதைமை. தனக்குள்ளே ஏற்படும் திடமான சிந்தனைகளே தன் மனத்துக்குச் சுகம் என்பதைப் போலத் தங்கள் உள்ளத்தில் புதுமைகளைத் தேடி உலகத்துக்குத் தரும் அந்த ஞானி களை எண்ணி எண்ணி வணங்கினான் இளங்குமரன். கடற்பரப்பின் மேலே தீவின் கீழ்க்கோடியில் நிலா எழுந்த போது, அந்த வேளை வருவதற்காகவே அது வரை அவன ருகில் காத்துக் கொண்டிருந்தவர் போல், “மணிநாக புரத்திற்குப் புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தம்பீ!” என்று நினைவூட்டினார் வளநாடுடையார். இளங்குமரன் புறப்படச் சம்மதம் என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்தான்.