பக்கம்:மணி பல்லவம் 5.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

839

கூடிய தீவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வீரசோழிய வளநாடுடையார் மனத்தில் ஏதோ திட்டமிடும் ஆழ்ந்த சிந்தனைகளோடு தளத்தில் அமர்ந்திருந்தார். அன்றைய நிலா உச்சி வானத்தை அடைவதற்கு ஓரிரு நாழிகைகளுக்கு முன்பே அவர்கள் மணிநாகபுரத்தை அடைந்து விட்டார்கள். அவர்களை எதிர்கொண்டு அழைத்துப் போவதற்காகக் குலபதி சங்குவேலித் துறையில் வந்து காத்திருந்தான். துறையிலிருந்து அவர்கள் எல்லாரும் குலபதியின் மாளிகைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அந்த மாளிகை ஒவ்வொரு கணமும் அவர்கள் வரவையே எதிர்பார்த்துக்கொண்டிருப்பதுபோல் பரபரப்பாயிருந்தது. மணிநாகபுரத்து மாளிகைக்குத் தன்னோடு உடன் வந்திருந்த எல்லாரையும் மாளிகையின் கீழ்ப்பகுதியில் முதற் கூடத்திலேயே தங்கியிருக்கச் செய்து விட்டு, இளங்குமரன் தான் மட்டும் ஓவிய மாடத்திற்குச் செல்லும் படிகளில் ஏறினான். எதை உணர்வதற்காகச் சென்று கொண்டிருந்தானோ, அதற்காக மனம் விரைந்தாலும், அந்தப் படிகளில் ஏறும்போது அவனுடைய கால்கள் தயங்கித் துவண்டன. கடைசிப் படியில் போய் அவன் தலை நிமிர்ந்தபோது அங்கு முன்பே வந்து நின்று கொண்டிருந்த அருட்செல்வ முனிவர் கைகளை நீட்டி அவனைத் தழுவிக்கொண்டார்.

“என்னிடம் சொல்லியபடியே திரும்பி வந்து விட்டாய்! இனி நான் சொல்லியபடி நீ செய்ய வேண்டும்” என்று கூறிக்கொண்டே அவனை அந்த ஓவிய மாடத்தின் ஒரு கோடியிலிருந்த தம்முடைய அறைக்கு அழைத்துக் கொண்டு போனார் முனிவர். அந்த அறையின் நடு மேடையில் ஓர் அகல்விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அருகே ஏட்டுச் சுவடியும் வைக்கப்பட்டிருந்தது. இளங்குமரனை அறைக்கு உள்ளே அழைத்துக் கொண்டு போன முனிவர் விளக்கின் அருகே மேடையில் அவனை அமரச் செய்தபின் அங்கே கிடந்த சுவடியை எடுத்து அவன் கைகளில் கொடுத்துத் தொடங்கலாம் என்றார். அவர் அளித்த அந்த ஏடுகளை கையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/57&oldid=1231791" இலிருந்து மீள்விக்கப்பட்டது