பக்கம்:மணி பல்லவம் 5.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

841

வற்றிக் குறையும் நீர் போலக் குன்றின. அந்த ஏட்டுச் சுவடிப் பாடல்களிலிருந்து காலவெள்ளத்தின் அடி ஆழத்தில் மூழ்கிப்போயிருந்த பல சம்பவங்கள் அவனுக்குத் தெரிந்தன. தான் பிறந்த கதையும் தன் தாய் தந்தை இருவரும் இறந்த கதையும் ஒருங்கு தெரிந்தது. தான் பூம்புகாரில் அருட்செல்வ முனிவரின் தவச் சாலையில் நினைவு தெரியாச் சிறு பருவத்தினனாக வளர்ந்து கொண்டிருந்தபோது தன்னைக் காண்பதற்காகவும் தனக்கு ஐம்படைத் தாலியும் பொன் அரைஞாணும் அணிவித்துப் பிறந்தநாள் மங்கலமும் வெள்ளணி விழாவும் கொண்டாடி மணிநாகபுரத்திற்குத் தன்னை அழைத்துப் போவதற்காகவும், நாக நாட்டிலிருந்து பூம்புகாருக்குப் புறப்பட்டு வந்த தன் அருமைத் தாய்மாமனாகிய காலாந்தக தேவரைக் கொலைகாரப் பாவிகள் ஏமாற்றி அழைத்துப் போய் வன்னி மன்றத்து இருளில் கொலை செய்ததையும் அறிந்தபோது துக்கமும் கொதிப்பும் ஒருங்கு அடைவதை இளங்குமரனால் தவிர்க்க முடியவில்லை. அந்த ஏடுகளில் அப்போது படித்து அறிந்து கொண்டவற்றிலிருந்து அவன் தெரிந்து கொண்டவற்றை ஒன்றாகக் கூட்டி வரிசையாக எண்ணியபோது அவை நிகழ்ந்த காலத்தில் எப்படி நிகழ்ந்திருக்குமோ அப்படியே அவன் கண்முன் காட்சிகளாகத் தோன்றலாயின.

7. வெறுப்பு வளர்ந்தது

அவனுடைய அருமைத் தாய்க்கு இளங்குமரன் மகனாகப் பிறப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சி இது. அந்தக் குடும்பம் பூம்புகாரின் பெரிய வாணிகர் ஒருவரைப் பகைத்துக் கொள்ள நேர்ந்ததும் அதன் காரணமாக ஆள்வலிமையும், செல்வாக்குமுள்ள அந்த வாணிகரின் மனத்தில் வெறுப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/59&oldid=1231731" இலிருந்து மீள்விக்கப்பட்டது