பக்கம்:மணி பல்லவம் 5.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

788

மணிபல்லவம்

எதற்காகவும் அழியாமல் நிறைந்தே நிற்க வேண்டும் என்ற உறுதியுடனும் அப்படியே அழிந்தாலும் அந்த அழிவானது தங்கம் நெருப்பில் அழிவதைப்போல முன்னிலும் நிறைந்து ஒளிரும் அழிவாக வளர வேண்டும் என்ற எண்ணத்துடனும், உடன் வந்தவர்களோடு மணிநாகபுரத்து மண்ணில் நடந்து சென்றான் இளங்குமரன். புண்ணியப் பேராற்றல் நிறைந்த நாகநாட்டு மண்ணில் இறங்கியபோது அவனுடைய வாழ்வில் ஐந்தாவது பருவம் பிறந்தது. ‘கவலைப்படாதே தம்பீ! உன்னுடைய வாழ்வில் இனிமேல் தான் எல்லாம் இருக்கிறது’ என்று வளநாடுடையார் கூறிய சொற்களில் ஏதோ பெரிய விளைவுக்கான அர்த்தம் இருக்க வேண்டுமென்று தோன்றினாலும் அது என்ன என்று அவரிடமே கேட்கும் துடிப்பு அப்போது அவனுக்கு ஏற்படவில்லை. ஏதோ வரவிருக்கிறதென்று அவன் மனத்திலேயே ஒருவாறு புரிந்தது. தன்னுடைய வாழ்வில் இப்போது வரவிருக்கும் அனுபவங்கள் எவையோ அவை தன்னை முழுமையாகக் கனிவிக்கப் பயன்படப் போவ தாக உணர்ந்து தன்னுடைய உள்ளத்தையும் உணர்வுகளையும் அவற்றுக்குப் பக்குவமான பாத்திரமாக்கிக் கொண்டிருந்தான் அவன்.

‘என்னுடைய எண்ணங்களில் இதற்கு முன்பும் இனியும் நீ ஒரு காவிய நாயகனாக உருவாகிக் கொண்டிருப்பவன்’ என்று திருநாங்கூர் அடிகள் என்றோ அவனை வாழ்த்திய வாழ்த்துக்கு விளக்கமாய் நிறைகிற வாழ்வு இந்தக் கதையின் ஐந்தாம் பருவத்தில் இளங்குமரனுக்கு எய்துகிறது.

தான் ஒளிமயமாக இருத்தல், தன்னை அணுகுவதற்கு அருமை, தன்னிடமிருந்து பிறர் ஒளிபெறுதல் தான் சார்ந்த இடத்தைத் தன்னுடைய சார்பில் தூயதாக்குதல் ஆகிய பொற்குணங்கள் இந்தப் பருவத்தில் இளங்குமரனின் வாழ்வில் நிறைந்து விளக்கமாகத் தோன்றுகின்றன. எல்லையற்ற நிதானத்தில் போய் நின்று கொண்டு இந்த உலகத்தைப் பார்த்துச் சிரிக்க வேண்டும் என்ற அவனது எண்ணமும் இந்தப் பருவத்தில் முழுமையாக நிறைகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/6&oldid=1231748" இலிருந்து மீள்விக்கப்பட்டது