பக்கம்:மணி பல்லவம் 5.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

843

கவிஞனாக வாய்த்திருந்த இளைஞன் தான் படைக்கும் கவிதைகளைப் போலவே வனப்பு வாய்ந்த கட்டெழில் தோற்றத்தையுடையவன். அமுதசாகரன் என்று தோற்றத்திலன்றிப் பெயரிலும் இனிமையைப் பெற்றிருந்தான் அவன். கடலைப் போலப் பரந்த மனம். குழந்தையைப் போலக் கள்ளங்கபடமறியாத வெள்ளைத்தனம் உலகத்து அழகுகள் எல்லாம் தன்னுடைய கவிதைக்கு மூலதனம் என்று உரிமையுடனே எண்ணும் வசீகரமான நினைவுகள். அந்த நினைவுகளோடு பரந்த அநுபவங்களைத் தேடி உலகத்தைப் பார்க்கும் வசீகரமான கண்கள். வசீகரமான முகம். இந்த உலகத்து அழகுகளையெல்லாம் எப்போதுமே ஒன்றுவிடாமல் அங்கீகரித்துக் கொள்வது போல வசீகரமான புன்னகை இவையெல்லாம் சேர்ந்துதான் அமுதசாகரன் என்னும் இளம் பருவத்துக் கவியாயிருந்தன.

பட்டினப்பாக்கத்து எட்டிகுமரன் பெருநிதிச் செல்வரே இந்த அழகிய கவிஞனின் தோற்றத்திலிருந்த வனப்பைத் தன்னுடைய குலப் பகைமையாக எண்ணும் படியான விளைவு அந்த முறை அவர்கள் நாகநாட்டுப் பெருந்தீவுக்குக் கடற்பயணம் சென்றபோது ஏற்பட்டது. அந்த விளைவுக்குப் பின் கவியின் போதாத காலமும் எட்டி குமரனுடைய குரோதமும் ஒன்றாகப் பிறந்து வளரத் தொடங்கிவிட்டன.

கடல் கடந்த நாகநாட்டுப் பெருந்தீவிலுள்ள இரத்தின வாணிகர் குடும்பத்துப் பெண்ணொருத்தி இணையற்ற பேரழகி என்று கேள்விப்பட்டு அவளுடைய ஓவியத்தையும் இரகசியமாக வருவித்துப் பார்த்தபின் அவளைத் தான் மணம் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலோடு எட்டிகுமரன் பயணம் புறப்பட்டிருந்தார். அந்தக் காலத்தில் சோழ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், பெரு மன்னர்களும்கூட இந்த வகையில் நாகநாட்டுப் பெண்களின் அழகில் மயங்கிப்போய் இரகசியமாக நாக நங்கையர்களைக் காந்தர்வ விவாகம் செய்து கொண்டு திரும்புவது வழக்கமாயிருந்தது. அவரும் அந்த ஆவலினால் தான் புறப்பட்டிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/61&oldid=1231793" இலிருந்து மீள்விக்கப்பட்டது