பக்கம்:மணி பல்லவம் 5.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

844

மணிபல்லவம்


வைசாக பூர்ணிமையன்று நாகநாட்டு மணிநாக புரத்தில் போய் இறங்கிய பின்பே கவி அமுதசாகரனுக்கு அவர்கள் பயணத்தின் நோக்கம் தெளிவாகப் புரிந்தது. எல்லாக் கடற் பயணத்தின் போதும் உடன் புறப்படுகிற வழக்கப்படிதான் இந்தப் பயணத்தின்போதும் அவன் புறப்பட்டிருந்தான். மணிநாகபுரத்தில் இறங்கிப் பொன்னும் மணியும், முத்துமாகப் பரிசுப் பொருள்களை ஊழியர்கள் பின்னால் சுமந்துவர, அவர்கள் மணம் பேசப் புறப்பட்ட கோலத்தை உடன் சென்று கண்டபோதுதான் கவி எல்லாவற்றையும் தெரிந்து கொண்டான். அந்த நாக நங்கையின் பெயர் மருதி என்று சொன்னார்கள். அவள் தமையனாகிய காலாந்தக தேவரை எட்டிகுமரன் முதலில் சந்தித்து மணம் பேசினார். காலாந்தக தேவரும் பெரிய இரத்தின வாணிகர் என்று அமுதசாகரன் அந்த மாளிகையைப் பார்த்ததுமே அறிந்து கொண்டான். விலை மதிப்பற்ற பரிசுப் பொருள்களை எதிரே வரிசையாகக் குவித்துக் கொண்டு எட்டிகுமரனும் அவருடைய அமைச்சராகிய நகைவேழம்பர் என்னும் ஒற்றைக்கண் மனிதரும், மருதியின் தமையனாகிய காலாந்தகதேவரிடம் மணப் பேச்சுப் பேசிக்கொண்டிருக்கும்போது தானும் அங்கு அவர்களோடு உடன் அமர்ந்திருக்கக் கூசிய கவிஞன் அந்த மாளிகையையும், அதன் சுற்றுப்புறத்திலுள்ள பூம்பொழில்களையும் சுற்றிப் பார்க்கலாம் என்ற ஆசையில் அவர்களை விட்டுத் தனியாய்ப் பிரிந்து புறப்பட்டான். பார்த்த இடமெல்லாம் இரத்தின மயமான அந்த மாளிகையின் காட்சிகள் அவன் மனத்தில் உல்லாச நினைவுகளை மலரச் செய்தன. அந்தக் காட்சிகளாலும் நெடுந்தொலைவு பயணம் செய்து வந்து காணும் புதிய நகரத்தின் தோற்றப் பொலிவுகளாலும் அவன் மனத்தில் வசீகரமான எண்ணங்கள் பொங்கி ஏதாவது கவிதை வடிவில் அந்த எண்ணங்களை வெளியிட வேண்டும் என்னும் தவிப்புப் பிறந்தது.

இப்படிப்பட்ட இங்கிதமான செளந்தரியத் தவிப்போடு அந்த மாளிகைக்கும் அதை அடுத்தாற்போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/62&oldid=1231794" இலிருந்து மீள்விக்கப்பட்டது