பக்கம்:மணி பல்லவம் 5.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

845

இருந்த நாக தெய்வக் கோட்டத்துக்கும் நடுவிலே உள்ள தொரு மலர்ப்பொழிலில் அமுதசாகரன் நுழைந்தபோது அங்கே ஓர் அற்புதமான காட்சியைக் கண்டான்.

அந்தப் பொழிலில் பூத்த மலர்களுக்கு நடுவே உயிருள்ள பெண் மலராய்க் கந்தர்வ உலகத்திலிருந்து மண்ணில் இறங்கி வந்தவளைப் போன்ற தோற்றத்தை உடைய யுவதி ஒருத்தி தனக்குள் சிரித்துக் கொண்டும் பாடிக்கொண்டும் பந்தாடிய வண்ணம் இருந்தாள். அடர்ந்த பூங்கொடி ஒன்றின் பின் ஒதுங்கி நின்று இந்தக் காட்சியைச் சிறிது நேரம் பார்த்த அமுதசாகரன் தன்னை மறந்த நிலையில், -

சந்தநகை சிந்தியிதழ் கொஞ்சிவர
இந்துதுதல் நொந்துவியர் முந்திவரக்
கொந்தளக பந்திமிசை முல்லைமலர்
தந்தமண மண்டியெழ முந்திவரு
பந்துபயில் நங்கையிவள் கொண்டஎழில்
நெஞ்சிலலை பொங்கியெழ வந்த மதியோ?

என்று தன் மனத்தில் தோன்றியதை மெலிந்த குரலில் பாடிவிட்டு நிமிர்ந்தபோது அந்தப் பெண்ணே பந்தாடுவதை நிறுத்திவிட்டு இவன் எதிரே வந்து நின்றாள். விநாடிக்கு விநாடி பார்வைக்குப் பார்வை புதிய ஆச்சர்யங்களைச் சிருஷ்டித்துக் கொண்டு பார்ப்பதுபோல் அவனை நோக்கி அவள் மருண்டாள். மகிழ்ந்தாள். ஆவலடங்காத கண்களால் பார்த்துப் பார்த்து அந்தப் பார்வையில் அவன் கண்களும் தன்னோடு எதிர்கொண்டு கலந்தபோது அவள் நாணித் தலைகுனிந்தாள். தரையைப் பார்த்தாள். நிமிர்ந்தும் நிமிராமலும் நாணமும் ஆசையும் போராடக் கடைக்கண்ணால் அவனை நோக்கித் தேன் வெள்ளமாய் இனித்துப் பெருகும் குரலில் ஒரு கேள்விகேட்டாள் அவள்.

“யாரைப் பற்றிய பாட்டோ இது! இதில் வருகிற வருணனைக்குப் பொருளாகி அமைந்தவள் பாக்கியசாலி தான்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/63&oldid=1195227" இலிருந்து மீள்விக்கப்பட்டது