பக்கம்:மணி பல்லவம் 5.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

846

மணிபல்லவம்

"அந்தப் பாக்கியசாலி இப்போது என் எதிரேதான் நிற்கிறாள்” என்றான் அமுதசாகரன்.

அவனிடமிருந்து இதைக் கேட்ட விநாடியில் தன் இரண்டு கண்களுமே சிருங்கார ரசத்தைப் பேசும் காவியங்களாக மாறினாற்போல மலர்ந்திட அவனை நிமிர்ந்து நோக்கினாள் அந்தப் பெண். அப்படியே சில விநாடி கண்களால் பேசினாள். பின்பு நாவினாலும் பேசுவதற்குத் தொடங்கியவளாகி மாறிக் கூறினாள்.

“இந்தச் சொற்களுக்காக நான் என்னை அர்ப்பணம் செய்கிறேன். இவை அழகியவை உயர்ந்தவை. இவற்றுக்கு என்னுடைய உணர்வுகளும் நானும் ஆட்படுகிறோம்!”

“மிக்க நன்றி, பெண்ணே !”

“இப்போதே உங்கள் நன்றியை நான் ஏற்றுக் கொள்வதற்கில்லை! ஏனென்றால் நீங்கள் என்னைப் பற்றி இன்னும் ஏதாவது பாட வேண்டும்.”

“நான் பாட வேண்டுமானால் நீயும் மறுபடி பந்தாட வேண்டும் பெண்ணே!”

அவன் இவ்வாறு கூறிய மறுகணமே அவள் கையில் பந்து சுழன்றது. இதழ்களில் சிரிப்பும் நெஞ்சில் பரவசமும் கண்களில் அநுராகமும், கைகளில் உற்சாகமும் சுழன்றன. மானைப்போல் விழித்துத் தேனைப் போலப் பேசி இளமயிலைப் போல் ஆடும் அவள் கோலத்தைக் கண்டு அமுதசாகரன் மேலும் பாடினான்.

முத்துச் சிலம்பின் ஒலி தத்தித் தவழ்ந்துவரச்
சித்தத் தலத்தின்மிசை மெத்தக் குழைந்துமலர்
ஒத்துத் திகழ்ந்தவிழி கற்றுத் தெரிந்த நயம்
சற்றுக் குறித்த தொனிபெற்றுப் புரிந்துவர
மெல்லக் குழைந்தமொழி வெல்லப்பாகுசெயச்
சொல்லில் உரைத்தகுறை கண்ணில் நிறைத்துவரக்
கண்ணில் மறைத்தகுறை சிரிப்பிற் பிறந்துவரப்
பெண்ணின் குலத்திலொரு புதுமை நிறைக்கின்றாய்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/64&oldid=1231795" இலிருந்து மீள்விக்கப்பட்டது