பக்கம்:மணி பல்லவம் 5.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

847

அமுதசாகரன் நிறுத்தியதும் அந்தப் பெண் பந்தாடுவதை நிறுத்தவிட்டு அவனருகில் வந்து நின்றாள். வார்த்தைக்கு வார்த்தை ஆச்சரியங்களைச் சிருஷ்டித்துக் கொண்டு மீண்டும் அவனை நோக்கிப் பேசினாள்.

“நவரசங்களில் சிருங்காரத்தை மட்டும் உங்கள் சொற்களுக்காகவே படைத்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.”

“எனக்கு அப்படித் தோன்றவில்லை பெண்ணே ! நவரசங்களுமே உன் கண்களிலிருந்துதான் பிறந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று அமுதசாகரன் சொல்லிக்கொண்டிருந்த போது அந்தப் பெண்ணின் தோழி ஓடிவந்து அவள் காதருகில் ஏதோ கூறி அவளை அவசரமாகக் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு மாளிகைக்குள்ளே போய்விட்டாள். அவள் போன திசையைப் பார்த்துக் கொண்டே நின்ற அமுதசாகரன், ‘பாவம்! யாரோ நல்ல இரசிகையாக இருக்கிறாள்’ என்று எண்ணியபடியே மேலே நடந்தான். அவன் அந்தப் பூம்பொழிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் மாளிகைக்குள்ளே வந்தபோது பட்டினப் பாக்கத்து எட்டிகுமரனும் மணிநாகபுரத்து இரத்தின வணிகராகிய காலாந்தக தேவரும் மணப்பேச்சில் ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள். மணப்பேச்சு நிகழ்ந்து கொண்டிருந்த கூடத்தின் ஒரு மூலையில் கவி அமுதசாகரனும் அடக்க ஒடுக்கமாகப் போய் நின்றுகொண்டான். அங்கு நிகழ்வதைக் கவனிக்கலானான். “அன்புக்கு உரிய எட்டி குமரரே! நீங்களும் எனக்குச் சமமான ஒரு வணிகர். உங்களுக்கு மகட்கொடை நேர்வதில் எனக்கும் பெருமை உண்டு. என் தங்கையை நீங்கள் மணக்கக் கருதிப் பரிசுப் பொருள்களுடன் தேடி வந்திருக்கிறீர்கள். நாகநாட்டு வழக்கப்படி இப்போது என் தங்கை மருதியை அழைத்து உங்களுக்கு அடையாள மாலை சூட்டச் சொல்கிறேன்” என்றார் காலாந்தகர்.

அமுதசாகரன் தன் தலைவராகிய பெருவணிகருக்கு வாய்க்கப் போகும் மங்கல மனையாளைக் காண்பதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/65&oldid=1231796" இலிருந்து மீள்விக்கப்பட்டது