பக்கம்:மணி பல்லவம் 5.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

848

மணிபல்லவம்

ஆவல் கொண்டான். கையில் மாலையேந்திக் குனிந்த தலை நிமிராமல் தோழிகளோடு அந்தக் கூடத்துக்குள் நுழைந்த பெண்ணைப் பார்த்தபோது அமுதசாகரனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ‘சற்று முன் பூம்பொழிலில் பந்தாடிக் கொண்டிருந்த அந்தப் பெண்தானா மருதி ?’ என்று மாலையை ஏந்திக்கொண்டு வரும் மற்றொரு பூமாலையாக அவள் வந்து கொண்டிருக்கும் கோலத்தை நோக்கி அமுதசாகரன் வியந்தான். அவன் வியப்பை அதிர்ச்சியாகவே மாற்றும் எதிர்பாராத காரியத்தைச் செய்தாள் அந்தப் பெண்.

அருகில் வந்ததும் தைரியமாக நிமிர்ந்து எல்லாரையும் ஏறிட்டுப் பார்த்த பின்பு, அந்த ஏழைக்கவி அமுதசாகரனின் கழுத்தில் மாலையிட்டுவிட்டுச் சிரித்துக் கொண்டே அவன் பக்கத்தில் நின்றுவிட்டாள் மருதி. மின்னல் வெட்டும் நேரத்தில் இது நடந்தபோது அந்தக் கூடத்தில் பிரளயமே வந்ததுபோல் சீற்றம் எழுந்தது. எட்டிகுமரன் பெருநிதிச் செல்வரும் அவருடைய அமைச்சராகிய நகைவேழம்பரும் கண் பார்வையாலேயே பொசுக்கி நீறாக்கிவிடுவது போலக் கவிஞனைப் பார்த்தார்கள். அவள் தமையனார் காலாந்தக தேவரும் சினம் கொண்டு கூறினார். “மருதீ! இதென்ன காரியம் செய்தாய் அம்மா! இதோ அமர்ந்திருக்கும் இந்தப் பெருஞ்செல்வர் பொன்னும் இரத்தினமுமாகப் பரிசுப் பொருள்களுடன் உன்னை மணம் பேசி இங்கே வந்திருக்கும்போது இவரோடு வந்திருக்கும் ஊழியனான கவிஞனுடைய கழுத்தில் நீ மாலை சூடிவிட்டாயே!”

“நீங்கள் சொல்கிறவரிடம் இரத்தினங்கள் இருக்கலாம். ஆனால் இந்தக் கவியின் சொற்களே இவரிடமுள்ள இரத்தினங்களாக இருக்கின்றன. இவை விலைமதிப்பற்றவை. ஒவ்வொரு நாட்டுப் பெண்ணுக்கும் தனக்கு வேண்டிய நாயகனைச் சுயமாக வரித்துக்கொள்வதற்கு உரிமை உண்டு. நான் சிறிது நேரத்திற்கு முன்பு நமது பூம்பொழிலில் இவரைச் சந்தித்தபோது இவருக்கு என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/66&oldid=1231797" இலிருந்து மீள்விக்கப்பட்டது