பக்கம்:மணி பல்லவம் 5.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

852

மணிபல்லவம்

"திரும்பமாட்டான்! என்றும் திரும்ப முடியாத இடத்திற்கு அந்தத் துரோகியை அனுப்பியாயிற்று. நீங்களும் அந்த இடத்திற்குப் போக விரும்பினால் அங்கே உங்களையும் அனுப்பி வைக்கிறேன்” என்று முனிவரை இழுத்துச் சென்று அந்த மாளிகையின் பாதாள அறையில் புலிக் கூண்டுகள் இருந்த இடத்திற்குக் கொண்டு போய்க் குரோதத்தோடு காண்பித்தார் பெருநிதிச் செல்வர்.

“நீ நன்றாக இருப்பாயா பாவீ” என்று குமுறி அலறய அருட்செல்வரின் சாபங்களை அவன் இலட்சியம் செய்யவில்லை. இடிஇடியென்று சிரித்தான்.

நான் நன்றாக இருக்க வேண்டும் என்று தேடி மணந்து கொள்ளச் சென்ற பெண்ணைத் தான் கவர்ந்த நன்றி கெட்டவனின் அழகிய உடம்பையும் அதில் ஓடிய பச்சைக் குருதியையும் இந்தப் புலிகளின் வயிற்றில் தேடிப் பாருங்கள் முனிவரே! என்று கொலை வெறியோடு கூவிக் கொண்டே அருட்செல்வ முனிவரைப் பிடரியில் கை கொடுத்துத் தள்ளியபடியே அந்த மாளிகையின் வாயிலில் கொண்டுவந்து வீழ்த்தினான் அவன். அன்று தவச் சாலைக்குத் திரும்பிய அருட்செல்வர் ஓராண்டு காலம் சக்கரவாளத்திலிருந்தே வெளியேறாமல் இந்தப் பாவத்தை எண்ணி எண்ணி வேதனைப்பட்டார். மோன விரதம் இருந்தார். கடுமையான தவங்களில் ஈடுபட்டார். அவருடைய மனப்புண் எதனாலும் ஆறவில்லை.

இரண்டாவது ஆண்டின் தொடக்கத்தில் இந்திர விழாவின் முதல் நாள் அதிகாலையில் எழுந்து அவர் தம்முடைய தவச்சாலையின் வாயிலுக்கு வந்தபோது அங்கே வைகறைப் பெண்ணான உஷையே எதிரில் வந்து நிற்பது போல் பேரழகு வாய்ந்த இளம் பெண்ணொருத்தி கையில் குழந்தையோடு நின்று கொண்டிருந்தாள்.

“நீ யார் அம்மா?”

“நான் மருதி ! இந்தத் தவச் சாலையில் உங்களோடு தங்கியிருக்கும் கவி அமுதசாகரனைப் பார்க்க வேண்டும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/70&oldid=1231801" இலிருந்து மீள்விக்கப்பட்டது