பக்கம்:மணி பல்லவம் 5.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

854

மணிபல்லவம்

தினைப் பொருளமைத்து மருதிக்காகப் பாடிய கவிச்சொற்கள் அந்த ஒலையில் இருந்தன.

“இப்போது அவன் வாழ்வது இந்தக் கவிதைகளில் மட்டும்தான் அம்மா !” என்று அழுகை பொங்கச் சொன்னார் அவர்.

“ஐயா! நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் என் மனம் இங்கு வந்து இறங்கிய வேளையிலிருந்து எதற்காகவோ காரணமின்றிப் பதறுகிறது. வலக்கண் துடிக்கிறது. துறைமுகத்தில் நான் வந்து இறங்கிய போது அந்தப் பெருநிதிச் செல்வரும், அவருடைய அரைக் குருட்டு அமைச்சரும் என்னைத் தற்செயலாகச் சந்தித்துவிட்டார்கள். அவர்கள் என் அருகில் வந்து இந்தக் குழந்தையையும் உற்றுப் பார்த்துவிட்டு ஏளனமாகச் சிரித்தார்கள். எனக்குப் பயமாக இருந்தது. துறைமுகத்திலிருந்து மீண்டும் அவர்கள் பார்வையிலே படாமல் தப்பி உங்களுடைய தவச்சாலைக்கு வழி கேட்டுக் கொண்டு இங்கு வந்து சேர்ந்துவிட்டேன். என் கணவர் மணிநாகபுரத்திலிருந்து புறப்படும்போது உங்கள் தவச்சாலையில் வந்து தங்கப் போவதாகத்தான் என்னிடம் கூறினார். உங்களையன்றி நான் வேறு யாரிடம் போய் அவரைப் பற்றிக் கேட்பேன்!”

“யாரிடம் கேட்டும் பயனில்லை, பெண்ணே ! உன் மனத்தைத் திடமாக்கிக்கொள். பின்பு சொல்வதைக் கேள். உன்னுடைய காதல் உனக்குக் கொடுத்த செளபாக்கியம் இந்தக் குழந்தையோடு முடிந்துவிட்டது. இந்த உலகத்தில் நல்லவை நீடிப்பதில்லை” என்று தொடங்கிச் சொல்லிவிட வேண்டும் என்று மனத்திற்குள் தவித்துக் கொண்டிருந்த உண்மையை மெல்ல மெல்ல அவளிடம் சொல்லி முடித்தார். அதைக் கேட்டபோது இடிவிழுந்த மரம் போலச் சில நாழிகை முகம் பட்டுப்போய் ஆடாமல் அசையாமல் சிலையாக வீற்றிருந்தான் மருதி. அப்போது அவள் சிறுவன் பசித்து அழுதான். எந்த நிலையிலும் கலங்காத கர்மயோகியைப் போல் குழந்தையை இடையில் எடுத்துக்கொண்டு அவள் பாலூட்டினாள். நெடுநேரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/72&oldid=1231803" இலிருந்து மீள்விக்கப்பட்டது