பக்கம்:மணி பல்லவம் 5.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

857

டியவளாகிய கபாலிகையான பைரவியை அனுப்பிக் காலாந்தகனுக்கு வழிகாட்டுவது போல அவனை அழைத்துச் சென்று வன்னிமன்றத்துக்குப் பின்புறம் கொண்டு போய் நிறுத்துமாறு ஏற்பாடு செய்த நகைவேழம்பர் பெருநிதிச் செல்வரோடு அங்கே பின் தொடர்ந்து போய்க் காலாந்தகனைக் கைப்பற்றினார். வஞ்சகமாகக் காலாந்தகன் அன்றிரவில் அவர்களால் கொல்லப்பட்டான். அவனிடமிருந்த செல்வங்களும், நவரத்தின ஐம்படைத் தாலியும் கொள்ளையடிக்கப்பட்டன.

நான்கு நாட்களுக்குப் பின்னர், இதை மறைந்து பார்த்துக் கொண்டிருந்த வேறொரு கபாலிகன் மூலம் இந்தப் பயங்கர இரகசியம் அருட்செல்வ முனிவருக்குத் தெரிந்தபோது, ‘இவ்வளவு கொடுமைகளுக்குப் பின்பும் இந்தக் குழந்தையை எப்படி வளர்த்து, ஆளாக்கப் போகிறேனோ?’ என்று அவர் பெருங்கலக்கம் கொண்டார். காலாந்தகனின் மனைவிக்கும் மகன் குலபதிக்கும் முனிவரால் அவனது சாவு தெரிவிக்கப்பட்டபின் அதே வேதனையில் நோய்ப் படுக்கையாகக் கிடந்து மாண்டாள் குலபதியின் தாய். தன்னிடம் வளர்ந்து வந்த மருதியின் பிள்ளைக்கு இளங்குமரன் என்று பெயர் சூட்டினார் முனிவர். நாளுக்கு நாள் அந்தப் பிள்ளையைப் பெருநிதிச் செல்வரும் அவருடைய துன்மந்திரியும் கழுகுகளாக வட்டமிடுவதைக் கண்டு அஞ்சிய முனிவர் வயது வந்ததும் அவனுக்குப் பாதுகாப்பாக இருக்கட்டும் என்று கருதி நீலநாக மறவருடைய படைக்கலச் சாலையில் அந்தப் பிள்ளையைச் சேர்த்துவிட்டார். பின்பு நாளடைவில் மணிநாகபுரத்து வாணிகக் கப்பல்களை எல்லாம் பெருநிதிச்செல்வரின் ஏவலர்கள் நடுக்கடலில் கடற் கொள்ளைக்காரர்களான கடம்பர் துணையோடு சூறையாடுவதாகப் பலமுறை கேள்விப்பட்டார் அருட்செல்வ முனிவர். இரண்டு பெண்களுக்குத் தந்தையாகி வாழ்ந்து மூத்த பின்பும் இந்த வெறுப்பை மறக்க முடியாத மனம் எட்டிகுமரனுக்கு இருப்பதைக் கண்டு அஞ்சினார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/75&oldid=1231806" இலிருந்து மீள்விக்கப்பட்டது