பக்கம்:மணி பல்லவம் 5.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

860

மணிபல்லவம்

உனக்காக மட்டும் தவம் செய்யத் தொடங்கிவிட்டேன். அந்த தவம் இன்று நிறைவேறுகிறது. இனிமேல்தான் என்னுடைய மெய்யான தவங்களை நான் செய்யத் தொடங்க வேண்டும்.”

“உங்கள் தவம் நிறைவேறுகிற விநாடிகளில் என் தவம் அழிகிறது. நான் படித்துப் படித்துச் சேர்த்திருந்த பொறுமை இப்போது எவ்வளவோ முயன்றும் என்னிடம் நிற்காமல் நழுவுகிறது...”

“அப்படி நழுவ வேண்டுமென்றுதான் இவ்வளவு காலம் நானும் காத்திருந்தேன். இதோ கீழே உன்னுடைய தாய்மாமன் மகனாகிய குலபதி பட்டினப்பாக்கத்து ஏழடுக்கு மாளிகையையே இரவோடிரவாகச் சூரையாடிக் கொள்ளையிட வேண்டுமென்று படை திரட்டிக் கொண்டு நிற்கிறான். நீ யாரைச் சந்தித்துப் பழிவாங்க வேண்டுமோ அவனிடம் காண்பிப்பதற்காக உன் நண்பனான ஓவியன் மணிமார்பனைக் கொண்டு இந்த ஓவியங்களைப் பிரதி செய்யச் சொல்லியிருக்கிறேன். நீ போகும்போது இவற்றையும் உன்னோடு கொண்டு போ. குலபதியும் அந்த நாகமல்லர்களும் உன்னோடு பூம்புகாருக்கு வருகிறார்கள். வளநாடுடையாரும் ஒவியனும் வேறு வருகிறார்கள். பூம்புகாரில் நீலநாகரும் இருக்கிறார்.”

“ஏன் நீங்கள் வரவில்லையா?”

“நான் இனிமேல் பூம்புகாருக்கு வருகிற எண்ணமில்லை. உனக்கு இவற்றையெல்லாம் உணர்த்தியபின் இன்று என் மனச்சுமை குறைந்துவிட்டது. இந்த விநாடியிலிருந்து நான் மெய்யாகவே எல்லாப் பாசங்களையும் உதறிய பூரணத் துறவியாகிவிட்டேன். இங்கேயே சமந்த கூடத்துக் காட்டில் எங்காவது போய்க் கடுமையான தவவிரதங்களில் இனி ஈடுபட எண்ணியிருக்கிறேன். இன்று இப்போது நீ எனக்குச் செய்ய முடிந்த கைம்மாறு, என் வழியில் நான் போவதற்கு விடுவதுதான். மறுபடி உன்னைக் காண வேண்டுமென்று எனக்கு எப்போது தோன்றுகிறதோ, அப்போது நானே உன்னைத் தேடிக் கொண்டு வருவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/78&oldid=1231808" இலிருந்து மீள்விக்கப்பட்டது