பக்கம்:மணி பல்லவம் 5.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

862

மணிபல்லவம்

மலையேறி வந்தவன் உயரத்தில் போய் நின்று கொண்டு இனிமேல் போவதற்கு இதைவிட உயரமானது எதுவுமில்லையே என்று மலைப்போடு நடந்து வந்து வழியைத் திரும்பிப் பார்ப்பது போலிருந்தது அந்த நிலை.

முதன் முதலாகப் பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகைத் தோட்டத்தில் அந்த பெருநிதிச் செல்வர் தன்னைச் சந்தித்ததையும் தன் கழுத்தின் வலதுபக்கத்துச் சரிவில் கருநாவற்பழம் போலிருந்த கருப்பு மச்சத்தை உற்றுப் பார்த்தபின், ‘அருட்செல்வ முனிவர் நலமாயிருக்கிறாரா?’ என்று குறும்புத்தனமாகத் தன்னை நோக்கிக் கேட்டதையும், தான் அன்று அந்த மாளிகையிலிருந்து வெளியேறியபோது ஒற்றைக் கண்ணன் தன்னை இரகசியமாகப் பின்தொடர்ந்ததையும் இப்போது வரிசையாக நினைத்துப் பார்த்துப் புரிந்துகொண்டான் இளங்குமரன். இந்த எண்ணங்களையும் தன் குடியின் ஒருதலைமுறை உயிர்களும் செல்வங்களும் அந்தப் பெருநிதிச் செல்வனால் அழிக்கப்பட்டிருப்பதையும் ஞாபகத்திற்குக் கொண்டுவந்து பார்த்தபோது அவனுடைய கருத்தில் கனல் மூண்டது. அந்த விநாடியில் அத்தகைய புதிய உணர்வுகளைத் தாங்கிக் கொண்டிருக்கும்போது தன் முகம் எப்படியிருக்கிறதென்று ஓவிய மாடத்தில் பதித்திருந்ததொரு கண்ணாடியில் பார்த்தான் இளங்குமரன். உணர்ச்சிகளின் சிறுமை எதுவும் படியாமல் பளிங்குபோல் இருந்த அவன் முகம் சற்றே கறுத்திருந்தது. இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்ததனால் ஏற்பட்ட உணர்ச்சிகள் ஒருபுறமும், இவை தெரிந்ததனால் இழந்த உணர்ச்சிகளை எண்ணி வருந்தும் வருத்தம் ஒருபுறமுமாக இளங்குமரன் சிறிது போது மலைப்படைந்து நின்றான். தன் தாயும் தந்தையும் சந்திப்பதாக வரையப்பட்டிருந்த ஒவியத்தின் அருகே சென்று சில விநாடிகள் கண்ணிமையாமல் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதன் கீழேயிருந்த ஏடுகளை எடுத்துப் பார்த்துத் தன் தந்தையின் சுவை நிறைந்த கவிதைகளைச் சிறிது நாழிகை உணர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/80&oldid=1231810" இலிருந்து மீள்விக்கப்பட்டது