பக்கம்:மணி பல்லவம் 5.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா .பார்த்தசாரதி

863

மகிழ்ந்தான். கீழே போய்க் குலபதியை அழைத்துக் கொண்டு வந்து நின்றார் வளநாடுடையார்.

“தம்பீ! குலபதியின் இரகசியப் படையிலிருக்கும் மல்லர்கள் ஒவ்வொருவரும் பத்து எதிரிகளை அடித்துக் கொல்லுகிற ஆற்றலுடையவர்கள். இவர்களோடு நாம் எல்லோரும் இன்று மாலையே பூம்புகாருக்கு கப்பலேற வேண்டும்” என்று வளநாடுடையார் கூறியபோது சில கணங்கள் இளங்குமரன் மெளனமாயிருந்தான். பின்பு ஒவ்வொரு சொல்லாகச் சிந்தித்துப் பேசுகிறவனைப் போலப் பேசினான்:

“ஐயா! யாருடைய வெறுப்பினால் என்னுடைய குடி இப்படிச் சீரழிந்ததோ அவருடைய செல்வங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு அவற்றை நமது கப்பல் நிறைய நிரப்பியபின் பூம்புகாரிலிருந்து இரவோடிரவாகத் திரும்பிவிட வேண்டும் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் போலிருக்கிறது. என் விருப்பம் அது அன்று. இவ்வளவு கெடுதலும் செய்வதற்குக் காரணமாக அந்த மனத்தில் இருந்த தீய எண்ணங்களை ஒவ்வொனறாக வெளியேற்றிப் பார்க்க நான் ஆசைப்படுகிறேன். பெண் சம்பந்தமாக ஏமாறியவர்களும், பொன் சம்பந்தமாக ஏமாறியவர்களும் அந்த ஏமாற்றத்துக்குக் காரணமாயிருந்தவர்கள் மேல் எவ்வளவு குரோதமுற முடியும் என்பதற்கு இந்த மனிதர் உதாரணமாயிருக்கிறார். என் தந்தையையும் தாயையும் இவர் அழித்துவிட்டதாக எண்ணிக் கொண்டிருப்பது தான் பேதைமை. உலகத்தில் பாடும் குலத்தின் கடைசிக் கவியின் கடைசிக் குரல் ஒலிக்கிற வரை அதில் என் தந்தையின் கருத்தும் தொனித்துக் கொண்டிருக்கும். உலகத்துப் பெண் குலத்தின் ஒவ்வொரு தலைமுறைப் பேரழகிலும் என் தாயின் அழகும் எங்கோ ஓரிடத்தில் எழில் பரப்பிக்கொண்டிருக்கும். படைப்பின் செல்வங்களிலிருந்து எதையும், எந்த மனிதர்களும் திருடி ஒளித்துவிடவோ, அழித்து நிர்மூலம் செய்துவிடவோ முடியாது. என் தாய்மாமன் காலாந்தக தேவரைத் துடிக்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/81&oldid=1231811" இலிருந்து மீள்விக்கப்பட்டது