பக்கம்:மணி பல்லவம் 5.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

866

மணிபல்லவம்

அங்கே நீலநாகரைச் சந்தித்து அவரிடம் கலந்தாலோசித்த பின் இளங்குமரனுக்குப் பாதுகாப்பாக என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் அவனுக்கும் தெரியாமலே செய்துவிடுவோம். தவிர அறிவாளிகளின் பிடிவாதம் நல்ல முடிவைத்தான் தருமென்று என் அனுபவத்தில் நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். நீயும், உன்னைச் சேர்ந்த மல்லர்களும் எங்களோடு வர வேண்டாம். இளங்குமரனுடைய போக்குப்படியே போய்க் காரியத்தைச் சாதிக்கலாம்” என்று குலபதிக்கு மறுமொழி கூறினார் வளநாடுடையார். குலபதியும் அரை மனத்தோடு அதற்கு இணங்கினான்.

இளங்குமரன் பயணத்திற்கு முன்பு நீராடிவிட்டுத் தூய்மையாக வந்து தன் பெற்றோர்களின் ஓவியத்தை வணங்கினான். தாய் மாமனாகிய காலாந்தக தேவனுடைய ஓவியத்தையும் வணங்கினான். பின்பு மணிமார்பனை நோக்கி, “நீ பிரதி செய்த ஓவியங்களை எடுத்துக்கொண்டு புறப்படு” என்றான்.

அப்போது குலபதி இளங்குமரன் அருகே வந்து, “ஐயா! பட்டினியாக வெறும் வயிற்றோடு போகாதீர்கள். இது உங்கள் மாளிகை. இங்கே நிரம்பிக் கிடக்கும் செல்வங்களையெல்லாம் ஆளவேண்டியவர் நீங்கள். என்னையும் இந்த மாளிகையின் செல்வங்களையும் தான் கைவிட்டு விட்டுப் போகிறீர்கள். நானும் என் வீரர்களும் உங்களோடு பூம்புகாருக்கு வரக்கூடாதென்றும் பிடிவாதமாக மறுக்கின்றீர்கள். மறுபடியும் நான் உங்களை எப்போது சந்திக்கப்போகிறேனோ? இன்று புறப்படுமுன் என்னோடு அமர்ந்து பசியாறிவிட்டுச் செல்லுங்கள்” என்று நெகிழ்ந்த குரலில் வேண்டிக்கொண்டான்.

சில கணங்கள் அந்த நெகிழ்ச்சிக்குக் கட்டுப்பட்டு ஒன்றும் சொல்லாத் தோன்றாமல் தயங்கி நின்றான் இளங்குமரன். அந்த வேண்டுகோளைச் சொல்லியவனுடைய முகத்தையும், அதைக் கேட்டுத் தயங்கி நிற்பவனுடைய முகத்தையும் பார்த்து அந்த விநாடியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/84&oldid=1231813" இலிருந்து மீள்விக்கப்பட்டது