பக்கம்:மணி பல்லவம் 5.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

791

வளர்ந்த பின் பிறப்பிக்கப்பட்ட அலங்காரங்களாலும் பெண்களுக்கு வாய்த்திருக்கிற அழகு போதாதென்று பேச்சிலும் அழகு வந்துவிட்டால் இந்த உலகம் அதைத் தாங்காது பெண்ணே !”

“உலகம் தாங்காவிட்டால் போகிறது! நீங்கள் இப்படிப் பேசி என்னை ஏமாற்றி ஏழாற்றுப் பிரிவில் கவிழ வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டே அவனுடைய விலாப்புறத்தில் வந்து நின்று அவன் பார்வை பதிந்திருந்த திசையை மறைத்தாள் பதுமை. மணிமார்பன் கண்களின் பார்வையை முழுமையாகத் தன் மனைவியின் மேல் திருப்பிக்கொண்டு அவளைக் கேட்டான்.

“சித்திரக்காரனுக்கு இப்படிப்பட்ட மனைவி வாய்த்துவிட்டால் தொழில் பெருகினாற் போலத்தான்.”

“மனத்தில் பெருகட்டும்! இப்படி வீதியில் பெருக வேண்டாம்” என்று விட்டுக் கொடுக்காமல் குறும்புச் சிரிப்போடு மறுமொழி கூறினாள் பதுமை. மணிமார்பனும் அவன் மனைவியும் மற்றவர்களை முன்போக விட்டு விட்டுப் பின்னால் மெல்ல மெல்லத் தயங்கி நடந்து சென்று கொண்டிருந்ததனால் தங்களுக்குள் கலகலப்பாகச் சிரித்துப் பேசிக்கொண்டு செல்வதற்கு வசதியாக இருந்தது. இந்திர விகாரத்துத் துறவிகளும் பிறரும் உடன் வந்திருந்ததனால் விசாகை மணிநாகபுரத்துப் பெளத்த விகாரத்துக்கு விடை பெற்றுக் கொண்டு போயிருந்தாள். மறுநாள் காலை மீண்டும் மணிபல்லவத்தில் சந்திப்பதாக விடைபெற்றுப் போகும் போது அவள் இளங்குமரனிடம் கூறியிருந்தாள்.

வீரசோழிய வளநாடுடையாரும் இளங்குமரனும் வீதியில் முன் பகுதியில் நாகதெய்வக் கோட்டத்தை நோக்கி விரைந்து போய்க் கொண்டிருந்தார்கள். மணி நாகபுரத்துக் கரையில் இறங்கி நிற்பதற்கு முன்னும், இறங்கி நின்ற பின்னும், தான் இளங்குமரனிடம் கூறியிருந்த செய்திகள் எந்தவிதமான பரபரப்பையும், ஆவலையும் அவனிடம் உண்டாக்காமற் போகவே வளநாடுடையாருக்கு வியப்பாயிருந்தது