பக்கம்:மணி பல்லவம் 5.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

872

மணிபல்லவம்

நிமிர்ந்து பார்த்தார். நீலநாகர் சிரித்துக்கொண்டே அவருக்கு மறுமொழி கூறினார்:

“உடையாரே! இந்தச் செய்தியை நீங்கள் என்னிடம் மறைத்ததனால் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. அருட்செல்வருடைய தவச்சாலை தீப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னால் அவரே என்னைச் சந்தித்துச் சில பொறுப்புக்களையும் இளங்குமரனைக் கவனித்துக் கொள்ளும் கடமையையும் என்னிடம் ஒப்படைத்தார். அன்று அவர் என்னிடம் பேசிய பேச்சுக்களிலிருந்தே ‘இவர் எங்கோ நீண்ட தொலைவு விலகிச் செல்ல விரும்புகிறார்’ என்று நான் அவரைப் பற்றிப் புரிந்துகொண்டேன்.

ஆனால் சில நாட்கள் கழித்துத் தவச்சாலையில் பற்றிய நெருப்பிலே அவரும் மாண்டு போனார் என்று நீங்கள் வந்து கூறியபோது அந்தச் செய்தி எனக்குப் பேரிடியாக இருந்தது. அதை நம்பவும் முடியவில்லை, நம்பியும் ஆக வேண்டியிருந்தது. அதனால் என்ன? நாம் உயிரோடு இருப்பதாக நினைத்து நம்பிக் கொண்டிருந்த ஒருவர் இறந்து போய் விட்டால்தான் நமக்கு ஏமாற்றம், துக்கம் எல்லாம் உண்டாகின்றன. நாம் இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த ஒருவர் உயிரோடிருக்கிறார் என்றால் நமக்கும் மகிழ்ச்சிதானே?”

“இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் இப்போது நமக்குத் தெரிந்துவிட்டது நீலநாகரே! இன்னாரென்றும் எதற்காகவென்றும் தெரியாமல் இந்தப் பூம்புகாரில் இளங்குமரனுக்குக் கேடு சூழ்ந்ததற்கு மூலகாரணமானவர் யாரென்று தெரிந்துவிட்டது. நீங்கள் அந்தக் கபாலிகையிடம் போய் விசாரித்துத் தெரிந்துகொள்ள முயன்றீர்கள். அதைவிடத் தெளிவாக இப்போது அருட்செல்வர் எல்லாவற்றையும் கூறிவிட்டார்...” என்று தொடங்கி எல்லாச் செய்திகளையும் நீலநாகருக்குச் சொல்லி முடித்தார் வளநாடுடையார்.

எல்லாவற்றையும் கேட்ட நீலநாகர் கொதிப்படைந்தார். “இவ்வளவையும் தெரிந்துகொண்ட பின்னுமா இந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/90&oldid=1231819" இலிருந்து மீள்விக்கப்பட்டது