பக்கம்:மணி பல்லவம் 5.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

875

இன்னும் சிறிதுபோது தாங்க முடியாத தவிப்பினால் உள்ளே குமுறுவதுபோல் அவனுடைய கண்கள் கலங்கி நீர் மல்கின. அருகில் இருந்து இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டே இளங்குமரனைக் கவனித்து வந்த மணிமார்பனுக்கு அந்த நிலையில் அவனிடம் பேசவே பயமாயிருந்தது. அன்று அவனுடைய முகத்தில் காண்பதற்கரிய தெய்வீகமான அமைதியைக் கண்டான் மணிமார்பன்.

“ஐயா! மணிநாகபுரத்தில் புறப்பட்ட நாளிலிருந்து இப்படிக் கொலைப் பட்டினி கிடக்கிறீர்களே? இது எதற்காக? உடம்பில் வெம்மையை அழிக்க விரும்பும் கடுந்துறவியைப் போல் கணத்துக்கு கணம் குளிர்ந்த நீரில் மூழ்கிவிட்டு வருகிறீர்களே? இதெல்லாம் என்ன கொடுமைகள்?” என்று பொறுக்க முடியாத தவிப்போடு இளங்குமரனைக் கேட்டான் ஓவியன். இளங்குமரன் இதழ்கள் பிரியாமல் மோன நகை புரிந்தான். பின்பு மணிமார்பனை நோக்கிச் சொன்னான்:-

“நண்பனே! மணிநாகபுரத்திலிருந்து புறப்பட்ட வேளையிலிருந்து என் மனத்திலும் உடம்பிலும் நெருப்புப் போல் ஏதோ ஒருணர்வு விடாமல் கனன்று கொண்டேயிருக்கிறது. உண்ணா நோன்பிலும், நீராடலிலும், தியானத்திலுமாக இந்தக் கனலை அவித்துவிட்டு என் மனத்தில் கனிந்த அருள் போய்விடாமல் நான் காத்துக் கொள்ள முயல்கிறேன். எந்த எந்த நிலைகளில் எந்த எந்தக் காரணங்களால் குரோதமும் கோபமும் கொண்டு கொதிக்க முடியுமோ அப்போதும் மனத்தைக் கவிழவிடாமல் சம நிலையில் வைத்துக்கொள்ள முயல்வதுதான் மெய்யான சான்றாண்மை. இரசங்களுக்கெல்லாம் மேலானதும் முதிர்ந்தும் முடிந்த முடிபாக நிற்பதுமாகிய நிறைகுணம் இந்தச் சாந்தரசம்தான். நம்முடைய கோபம் தன் முழு உருவமும் கிளர எழவேண்டிய இடம் எதுவோ அங்கேயும் கூட அதை அடக்கி நின்று சிரிப்பதுதான் உயர்ந்த அடக்கம். என்னால் அப்படி அடங்கி நிற்க முடியுமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/93&oldid=1231822" இலிருந்து மீள்விக்கப்பட்டது