பக்கம்:மணி பல்லவம் 5.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

879

மாடத்தின் நுனியில் சித்திரம்போல் அசையாமல் நின்று கீழ்நோக்கி இமையாத கண்களால் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் சுரமஞ்சரியைச் சந்தித்தது. இந்தப் பார்வைக்காக, இந்தச் சந்திப்புக்காக இவற்றுக்கென வாய்க்கும் விநாடிகளுக்காகவே யுக யுகாந்தரமாகக் காத்துக் கொண்டிருந்தது போன்ற ஆசையும் காதலும் அவள் கண்களில் தெரிந்தன. ‘என்னுடைய தவிப்பு - என்னுடைய வேட்கை எல்லாம் உங்களுடைய அழகிலிருந்து பிறந்தவை. உங்களுடைய கண்களையும் தோள்களையும் நான் சந்திக்க நேர்ந்த கணங்களிலிருந்து நான் உங்களுக்காகவே நெகிழ்ந்து போய்த் தவிக்கிறேன்’ என்று அந்தக் கண்கள் அவனிடம் பேசின. முகத்தையே ஆர்வம் மணக்கும் பூவாக மலர்த்திக் கொண்டு காலில் விழுந்து அர்ப்பணமாகிவிடத் தவித்துக் கொண்டு நிற்பது போல நிற்கும் அவள் கண்களைத் தொடர்ந்து சந்திக்கப் பயந்து தலை குனிந்து கீழே பார்க்கத் தொடங்கினான் இளங்குமரன்.

உள்ளே போயிருந்த காவலன் திரும்பி வந்து தன்னைப் பின்தொடர்ந்து வருமாறு இளங்குமரனை அழைத்தான். அவனைப் பின்தொடர்ந்து உள்ளே போவதற்கு முன் கடைசியாக இளங்குமரன் மேலே நிமிர்ந்து பார்த்தபோது சுரமஞ்சரியின் கவர்ச்சி நிறைந்த கண்களில் ஈரம் பளபளத்து மின்னியது. அவளுடைய மயக்கும் கண்கள் இப்போது மழைக்கண்களாயிருந்தன. இதயத்தில் ஏதோ ஒரு மென்மையான பகுதிவரை ஊடுருவித்தாக்கும் அந்தப் பார்வையிலிருந்து தன்னைத் தானாகவே விடுவித்துக் கொண்டு உள்ளே புகுந்தான் இளங்குமரன்.

அந்தக் காவலன் அவனைப் பெருநிதிச் செல்வர் நோய்ப் படுக்கையில் இருந்த கூடத்திற்குள் அழைத்துக் கொண்டு போய்விட்டான். அந்த கூடத்திற்குள் முதல் அடி பெயர்த்து வைத்தபோது அவன் கால்கள் நடுங்கின. அவன் எந்தப் பக்கமாக அந்தக் கூடத்திற்குள் நுழைந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/97&oldid=1231826" இலிருந்து மீள்விக்கப்பட்டது