பக்கம்:மணி பல்லவம் 5.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

880

மணிபல்லவம்

தானோ அந்தப் பக்கம் தலைவைத்துத்தான் கட்டிலில் அவரும் படுத்திருந்தார். தலையைத் திருப்பாமலே உள்ளே யாரோ அடிபெயர்த்து வைத்து வரும் ஓசையைக் கேட்டு உணர்ந்தே அவர் படுக்கையிலிருந்தபடி வினவினார்.

“யார் நீங்கள் ?”

“நான் ஒரு கவியின் மகன்!”

“கவியின் மகனுக்கு இங்கென்ன வேலை? கவிகள் இந்த மாளிகையின் வாயிற்படியில் துணிவாக ஏறிவந்து நிற்க முடியாதே? அப்படி யாராவது கவிகள் என்று சொல்லிக்கொண்டு இந்த மாளிகையின் படிகளில் ஏறினால் கடைசி படிகளில் ஏறுவதற்குள் அவர்கள் காலை முறித்துவிடச் சொல்லிக் காவலர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறேனே? பல ஆண்டுகளாக இந்த மாளிகையின் வழக்கமாயிற்றே இது?”

“கவிகளின் பரம்பரைமேல் உங்களுக்கு ஏன் இத்தனை குரோதம்?” என்று இளங்குமரன் சிரித்துக்கொண்டே கேட்டான்.

அவனுடைய இந்தக் கேள்வியைச் செவியுற்று, “இது எங்கோ கேட்ட குரல்போல் இருக்கிறதே? நீ யார் அப்பா? இப்படி என் முகத்துக்கு முன்னால் வந்து நின்று பேசு. யாரோ சந்நியாசி என்னைத் தேடி வந்திருப்பதாக அல்லவா காவலன் கூறினான் ?” என்றார் பெருநிதிச் செல்வர்.

சிறிது நேரம் பேசியதிலேயே அவர் குரல் கரகரத்துத் தளர்ந்திருந்தது. இளங்குமரன் தான் நின்ற இடத்திலிருந்தே அவருக்கு மறுமொழி கூறலானான்.

“நீங்கள் எங்கோ கேட்ட குரல்தான் இது! நியாயத்தின் குரல். எந்தப் பிறவியிலாவது உங்கள் செவிகளில் விழுந்திருக்கும். இப்போது மறுபடி அதைக் கேட்கிறீர்கள். இப்போது, உங்களிடம் பேசுவது என் குரல் அல்ல. இது நியாயத்தின் குரல். கவி அமுதசாகரருக்கும் அவருடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/98&oldid=1231827" இலிருந்து மீள்விக்கப்பட்டது