பக்கம்:மதன கல்யாணி-1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 85

மாத்திரம் கேட்டீர். இப்போது மேல்சங்கதி என்று அதற்கு ஒரு வால் ஒட்டவைத்திரே, அது இன்னதென்பது விளங்கவில்லை. தவிர, நீர் யார் என்பதையும் இன்னம் சொல்லவில்லை” என்றாள்.

அதைக் கேட்ட மைனர், “பாட்டீ! நான் மாரமங்கலம் ஜெமீந்தார்; உன்னுடைய எஜமாட்டியை நான் நாடகத்தில் ஒவ்வொரு நாளும் பார்த்திருக்கிறேன். அவளைப் பார்ப்பது என்றால், ஆணாகப் பிறந்தவன் எவனாய் இருந்தாலும், அப்படியே மதிமயங்கி, அவள் மீது மோகங் கொண்டே தீரவேண்டும். இந்த பங்களாவுக்கருகில் திருடர் கையில் அடிதான் தின்றேன். அதற்குப் பிராயச்சித்தமாக, உன்னுடைய எஜமாட்டியின் சிநேகத்தையாவது சம்பாதித்துக் கொண்டு போகலாம் என்று நினைக்கிறேன். அதற்கு ஏதாவது வழி பிறக்குமா? அவளுக்கு வேறே ஆசை நாயகன் எவனாவது ஏற்பட்டு இருக்கிறானா? இல்லாவிட்டால் காரியம் பலிக்குமா?” என்றான்.

கிழவி:- காரியம் பலிப்பதும் பலிக்காததும் உம்முடைய ஈகையைப் பொருத்ததாக இருக்கிறது. இதுவரையில் எத்தனையோ மனிதர் பெரும் பெரும் தொகைகளைக் கொடுப்பதாகச் சொல்லி முயன்றனர். எதுவும் பலிக்கவில்லை. அவர்கள் எல்லாரும் குறித்த தொகையைவிட நீர் அதிகம் கொடுப்பதாகச் சொல்லி முயன்று பார்த்தால், ஒருகால் பலிக்குமோ என்னவோ? -

மைனர். அப்படியானால் அவள் பணத்தை மாத்திரந்தான் நாடுகிறவளோ? வேறே எதையும் கவனிக்கிறவளல்லவா?

கிழவி:- அப்படியல்ல. பணத்தை விரும்பாத மனிதரும் உண்டா? அதில்லாவிட்டால், மற்ற சுகங்கள் எப்படி உண்டாகும்? பங்களா வேண்டும், ஆள் மாகாணங்கள் வேண்டும், பெட்டி வண்டி வேண்டும், இவைகள் எல்லாம் எப்போதும் நீடித்து நடப்பதற்கு, பெருத்த வருஷ வருமானம் வந்து கொண்டிருக்க வேண்டும். நாடகத்தில் கொடுக்கிற சம்பளம் ஒன்றுக்கும் போது மானதாக இல்லை. நீர் பகலில் வந்து பேசிப் பார்க்கிறதுதானே, இந்த அகாலத்தில் இப்படி வருகிறது நன்றாக இல்லையே - என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/103&oldid=646977" இலிருந்து மீள்விக்கப்பட்டது