பக்கம்:மதன கல்யாணி-1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மதன கல்யாணி

எண்ணம் அவனது மனதில் தோன்றி முற்றிலும் வதைத்தது. அவன் தனது பகைவனது காலில் ஒரு முள் தைப்பதானாலும், அதைக் கண்டு இரக்கங்கொள்ளக் கூடிய பரமதயாளமும் இளக்கமுடைய மனத்தினன் ஆதலால், அவனது தேகமும் மனமும் ஆடிப்போய் விட்டன. அப்போது அவளிடம் தான் நெருங்குவதும் சரியான காரியமாகப்படவில்லை. அந்தப் பரிதாபகரமான நிலைமையில் அவளைத் தேற்றாது விட்டுப் போய்விடவும், அவனது மனம் அனுமதிக்கவில்லை. என்ன செய்வான்? தான் என்ன செய்வ தென்பதை அறிய மாட்டாதவனாய், அவன் அசைவற்று அப்படியே கால் நாழிகை நேரம் நின்றான். விசனமே வடிவாக உட்கார்ந்து உட்புறத்திலேயே தனது நாட்டத்தை நிறுத்தியிருந்த கண்மணியம்மாள் தனக்கெதிரில் இருந்த சுவரில் ஆடியதை திடீரெனக் கண்டு, அது எங்கிருந்து உண்டாகிறது என்று கவனித்தாள். தனக்குப் பின்புறத்தில் இருந்த வாசற்படியில் இருந்து அந்தச் சாயல் சுவரில் வந்து வீழ்ந்திருப்பதாக நினைத்த கண்மணி சடக்கென்று திரும்பி வாசற்படியை பார்த்தாள். அவளது கண்கள் கோவைப்பழம் போலச் சிவந்திருந்தன. அவற்றினின்று அருவிகள் போல இருந கன்னங்களின் வழியாக மார்பின் மீது கண்ணிர் வீழ்ந்தபடியே வாசலை நோக்கிய அந்த மடமாது, தனது வீணையாசான் வாசற் படியில் நின்றதைக் கண்டு திடுக்கிட்டு ஒரே நொடியில் தனது கண்களையும் கன்னங்களையும் துடைத்துக் கொண்டு அடக்க ஒண்ணா நாணத்தோடும் மரியாதையோடும் எழுந்து நின்று, கீழே குனிந்த வண்ணம் தனது விசனக்குறிகளை முற்றிலும் விலக்க முயன்றவளாய் “ஏன், உள்ளே வரலாமே! அங்கே நிற்பதேன்?” என்று தணிவான குரலில் கூறினாள். அவள் உயர்குல ஒழுக்கம் உடையவள் ஆதலால், தனது விகாரக் குறிகளை உடனே மாற்றி, இயற்கை அழகையும் சுமுகத்தையும் ஒரு நொடிக்குள் உண்டாக்கிக் கொண்டாள் என்பதை உணர்ந்த மதனகோபாலன் தனக்குள் மெளனப் பேரின்பம் அடைந்தவனாய் அவளைக் கூர்ந்து நோக்காமல், “அத்தையம்மாள் வெளியில் போயிருக்கிறார்கள் போலிருக்கிறதே வேண்டுமானால் பாடத்தை நாளைக்கு வைத்துக் கொள்ளலாமா என்று நினைத்தேன். உன்னுடைய பிரியப்படி செய்கிறேன்” என்றான். புல்லாங்குழலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/116&oldid=647002" இலிருந்து மீள்விக்கப்பட்டது