பக்கம்:மதன கல்யாணி-1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 மதன கல்யாணி

வைத்த வாத்சல்யம் வட்டியும் முதலுமாக வளர்ந்து அது பெருத்த பைத்தியமாக முற்றிக் கொண்டே போனது.

மேற் குறிக்கப்பட்ட தினத்தன்று, மைனர் அவளிடம் தாறு மாறாகப் பேசியதும், துரைஸானியம்மாள் கீழ்ப்படியாத குணத்தைக் காண்பித்தும் ஒருபுறத்தில் கல்யாணியம்மாளது மனத்தை வருத்தினதன்றி, மதனகோபாலன் வழக்கத்துக்கு மாறாக அன்று அதுகாறும் வாராதிருந்தது இன்னொரு புறத்தில் பெரிதும் வதைத்துக் கொண்டிருந்தது.

கடைசியாக, அவன் வந்து விட்டான் என்ற செய்தியானது அவளது எண்ணிறந்த வேதனைகளுக்கெல்லாம் அபயஸ்தம் கொடுத்தது போல இருந்ததன்றி, அவனைக் காண்பது தெய்வத்தைக் காண்பது போல ஆகிவிட்டது. அன்று அவள் தனது நாற்காலியில் உட்கார்ந்து கால் நாழிகைக்குள் தனது கண்களைக் கொண்டு மதனகோபாலனது அற்புதமான அழகை அள்ளிப்பருகி, ஆனந்த பரவசமுற்றவளானாள். அதுகாறும் அவளது மனத்தைப் புண்படுத்திய ஏனைய கவலைகளும் துன்பங்களும் ஒரு நொடியில் பறந்து போயின. அவள் அதே தியானமாக அவனை உற்று நோக்கிய வண்ணம் தனது முகத்தின் ஒரு பாகத்தைப் புஸ்தகத்தால் மறைத்தவளாய் அசைவற்று உட்கார்ந்திருந்தாள். அந்தச் சமயத்தில், பெண்கள் இருவரும் முதல் நாளில் கற்றுக்கொண்ட பாடங்களை ஒழுங்காக வீணையில் வாசித்து முடிக்கவே, மதனகோபாலன், அவர்களுக்கு ஒரு புதிய -கீர்த்தனை கற்றுக் கொடுக்க நினைத்து, அவர்களது வீணைகளுள் ஒன்றை வாங்கித் தனக்கருகில் வைத்துக் கொண்டு, நாட்டைக் குறிஞ்சி என்ற அருமையான ராகத்தை எடுத்து மிகவும் உருக்க மாகவும் கர்ணமிருதமாகவும் ஆலாபனை செய்து, அதே ராகத்தில் ஒரு கீர்த்தனையைத் தொடங்கி நிரம்பவும் சொகுசாக அதை வீணையில் வாசிக்க ஆரம்பித்தான். வயதில் அவன் மிகவும் சிறியவனாக இருந்தான் ஆனாலும், அபார ஞானத்தோடும், பூரணமான கைப்பழக்கத்தோடும், அவன் அந்த ராகத்தை மகா கம்பீரமாக உயர்த்தித் தணித்துப் பாடவே, அங்கிருந்த பெண்டீர் மூவருக்கும் தாம் இருந்தது பூலோகமோ சுவர்க்க லோகமோ என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/138&oldid=647045" இலிருந்து மீள்விக்கப்பட்டது