பக்கம்:மதன கல்யாணி-1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 மதன கல்யாணி

விஷயம் அவனுக்குத் தெரிந்தது. தான் தனது அற்புதமான அழகினாலும், சங்கீதத்தினாலும், மாதுரியமான குண ஒழுக்கங் களினாலும், கல்யாணியம்மாளது மன நிலைமையை எவ்வளவு துரம் சின்னா பின்னமாக்கிச் சீர்குலைத்து விட்டோம் என்பதை அவன் அதுவரையில் சிறிதும் சந்தேகித்தவன் அன்று ஆதலால், அவள் வேறு ஏதோ காரணம் பற்றி எழுந்து போய்விட்டதாக நினைத்துக் கொண்டு, துரைஸானியம்மாளின் பக்கம் திரும்பி “அம்மாள் அவர்கள் உள்ளே போய்விட்டார்கள் போல் இருக்கின்றது. நான் அவசரமாய்ப் போக வேண்டும். அவர்களிடம் சொல்லிவிடு” என்றான். துரைஸானியம்மாள் அதற்கு இணங்க, அவன் அந்த மண்டபத்தை விட்டு வெளிப்பட்டான்.

ஆனால் அந்த பங்களாவின் உட்புறக் கட்டிடம் அரைக்கால் மயில் சதுரம் பரவியதாய், ஒரு பெருத்த அரண்மனை போல ஏராளமான மாடங்களையும், கூடங்களையும், மண்டபங்களை யும், அந்தப்புரங்களையும் கொண்டிருந்தது ஆகையால் மதனகோ பாலன் அவைகளைக் கடந்தே வெளியிற் செல்ல வேண்டி இருந்தது. அவ்வாறே அவன் சென்று கொண்டிருந்தான்; அவனது கார்யம் இப்படி இருக்க, என்றைக்கும் இல்லாமல், அன்று தங்களது தாய், சங்கீதப் பயிற்சி முடிவடைவதற்குள் எழுந்து போனது, துரைஸானியம்மாளது மனதில் வியப்பையும் திகைப்பையும் ஒரு வகையான சந்தேகத்தையும் உண்டாக்கி பல வகைப்பட்ட எண்ணங்களுக்கும் யூகங்களுக்கும் இடம் கொடுத்தது. ஆனால், கோமளவல்லியோ அதைச் சாதாரணமான சம்பவமாக மதித்து ஏதேனும் தேகபாதையின் பொருட்டு தங்களது தாய் எழுந்து போயிருக்கலாம் என்று அபிப்பிராயப்பட்டு அதைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்யாமல் இருந்துவிட்டாள். பக்கத்து அறையில், தயாராகக் காத்திருக்கும் இரண்டு தாதிகள் வீணை வித்துவான் எழுந்து சென்றவுடனே உள்ளே நுழைந்து அவர்களது வீணைகளை வாங்கி, அவைகளுக்கு உறைகள் போட்டு, அவற்றைப் பெட்டிகளுக்குள் வைத்துப் பூட்டுதல் வழக்கம் ஆதலால், அன்றைய தினமும், அவர்கள் வழக்கபடி வந்து தங்களது கடமையைச் செய்தபின் மடந்தையர் இருவரையும், அங்கிருந்து அவரவ்ரது அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/140&oldid=647050" இலிருந்து மீள்விக்கப்பட்டது