பக்கம்:மதன கல்யாணி-1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 129

மாட்டாமல் நிரம்பவும் வெட்கமும் சஞ்சலமும் அடைந்தவனாகக் கீழே குனிந்த வண்ணம், நடுநடுங்கித் தனது கடைக்கண்ணால் அவளது முகத்தோற்றத்தை மெல்ல நோக்கி அதை ஆராய்ந்தான். அவளது கண்கள் இளகிப் போய் ஒரு வகையாக ஜ்வலித்தன. மிகவும் விசாலமான இரண்டு விழிகளும் தெப்பங்களைப் போல மிதந்து கொண்டிருந்தன. அதுகாறும் கம்பீரமும் ஆண்மையும் நிறைந்து விளங்கிய அவளது தோற்றம் இளக்கமும் உருக்கமும் காட்டி, அவளது உள்ளம் ஆசையே வடிவாய், அன்பே நினைவாகத் தத்தளிப்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெள்ளிதில் வெளியிட்டது. ஒப்புயர்வற்ற வனப்பும் நிறைவும் நிமிர்வும் வாய்ந்த அவளது மார்பு விம்மி விம்மித் தணிந்தது. அந்தக் குறிகளினால் அவளது தேகம் சொல்லில் அடங்காத வேதனைகளினால் உலப்பப்பட்டிருந்ததாகத் தெரிந்தது. அதைக் கண்ட மதனகோபாலன் ஒரு வகையான அச்சம் கொண்டான்! அவனது கைகால்கள் வெடவெட வென்று நடுங்கின. கல்யாணி யம்மாளுக்கெதிரில் தான் நின்று கொண்டிருந்தது அவனுக்கு நிரம்பவும் வேதனையாக இருந்தது; அந்த இடத்தை விட்டு அப்பால் போய்விடலாமா என்ற ஒரு நினைவு அவனது மனத்தில் எழுந்ததானாலும் தான் அவ்வாறு செய்வது ஒழுங்கல்ல என்றும், தெய்வீகமாகத் தனக்கு நேரும் துன்பங்களைத் தான் அனுபவித்தே தீரவேண்டும் என்றும் நினைத்தவனாய், அவன் தயங்கித் தயங்கி

நின்றான்.

அவன் தனக்கெதிரில் சோபாவின் மேல் உட்கார்ந்து கொள்ள அஞ்சுகிறான் என்று நினைத்த கல்யாணியம்மாள், முன்னிலும் அதிக அன்பாக அவனை நோக்கி, “மதனகோபாலா! என்ன யோசனை செய்கிறாய்? பாதகமில்லை; உட்கார்ந்து கொள் ஏன் இப்படி பயப்படுகிறாய்? இங்கே வந்ததைப் பற்றி நான் கோபித்துக் கொள்ளப் போகிறேன் என்று கவலைப்படுகிறாயா? என்னை அவ்வளவு அநாகரீகமான மனுவி என்று நினைக்காதே; உன்னுடைய தங்கமான குணத்துக்கும், நல்ல நடத்தைக்கும், உன்னுடைய விரோதிகூட உன்மேல் கோபங்கொள்ளமாட்டானே! அப்படி இருக்க நான் கோபித்துக் கொள்வேனா? ஒருக்காலுமில்லை. கவலைப்படாமல் உட்கார்ந்து கொள்; கால் நாழிகை நேரம் ம.க.1.10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/147&oldid=649586" இலிருந்து மீள்விக்கப்பட்டது