பக்கம்:மதன கல்யாணி-1.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் #87

பக்கம் திருப்பினாள். திடீரென்று ஒரு பெரும் பூதம் தோன்றி யதைக் கண்டிருந்தால் கூட, அவள் அவ்வளவு அதிகமாகப் பயந்திருக்க மாட்டாள். அவளது மனதின் குழப்பத்தையும் சஞ்சலத்தையும் அவளது முகம் கண்ணாடி போல நன்றாகக் காட்டியது; கேட்கப்பட்ட கேள்விக்கு மறுமொழி சொல்ல வேண்டும் என்பதையும் உணராமல், கண்மணியம்மாள் சிறிது தடுமாறி அதன் பிறகு, “ஆம்” என்று மெதுவாக மறுமொழி கூறினாள். கல்யாணியம்மாள் நல்ல நுட்பமான புத்தி உடையவள் ஆதலால், கண்மணியின் மனது சரியான நிலைமையில் இல்லை என்பதை உடனே உணர்ந்து கொண்டதன்றி, மதனகோபாலனது பெயரைச் சொன்ன மாத்திரத்தில் அவள் திடுக்கிட்டு சஞ்சலம் அடைந்ததில் இருந்து, அவனிடத்தில் அவள் நிரம்பவும் அதிகமான அபிமானம் வைத்திருக்கிறாள் என்பதை யூகித்துக் கொண்டாள்.

அப்போது மீனாகூஜியம்மாள், “சரி; நீங்கள் பேசுவதைப் பார்த்தால், அந்த மதனகோபாலனைப் பற்றியே ஏதோ சொல்லப் போகிறீர்கள் போலிருக்கிறது. நம்முடைய வீடுகளில் எல்லாம், அவனைச் சேர்த்ததே பிசகாய்ப் போய்விட்டது! வந்த ஆரம்பத்தில் பரம யோக்கியன் போல நடந்து கொண்ட பையன், வரவர கழுதை நிறத்துக்கு வந்து விட்டானே! அவன் இங்கே தான் அயோக்கியத் தனமாக நடந்து கொண்டான் என்றால் அங்கேயும் ஏதோ வாலை ஆட்டியிருக்கிறான் போலிருக்கிறதே!” என்றாள்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் ஒருவாறு வியப்படைந்த வளாய், கண்மணியிருந்த பக்கம் திரும்பி மிகவும் கூர்மையாகவும் சம்சயத்தோடும் அவளை உற்று நோக்கிய வண்ணம், “சரி; அப்படியானால், இங்கேயும் ஏதோ விசேஷம் நடந்திருக்கிறது! பெரிய மனிதருடைய வீடுகளில் எல்லாம் தன்னை அழைத்து பெருத்த பணத் தொகையைக் கொடுத்து அபிமானமாக நடத்து கிறார்கள் என்பதைக் கண்டவுடனே, பையனுக்குக் கொழுப்பும் குறும்பும் ஏறிவிட்டாற் போலிருக்கிறது. ஆனால், நல்ல வேளையாக அவன் அங்கே என்னுடைய குழந்தைகளினிடத்தில் தன்னுடைய அயோக்கியத்தனத்தைக் காட்டவில்லை; மூலஸ்தான தெய்வத் தினிடத்திலேயே தன்னுடைய கைவரிசையைக் காட்டிவிட்டான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/205&oldid=649649" இலிருந்து மீள்விக்கப்பட்டது