பக்கம்:மதன கல்யாணி-1.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 195

களை அழுகையின் மூலமாகவோ சொற்களின் மூலமாகவோ வெளியில் காட்டிக் கொள்ள மாட்டாமல் அடக்கிக் கொள்ள முயன்ற துன்பமே அசாத்தியமான துன்பமாக இருந்தது. அவள் மெல்லவும் மாட்டாமல் விழுங்கவும் மாட்டாமல், நெருப்பின் மேல் கிடந்த புழுவைப் போல உட்கார்ந்திருந்தாள். அவளது எண்சாண் உடம்பும் ஒரு சாணாகக் குன்றிப் போய்விட்டது.

மீனாகூஜியம்மாளோ, கல்யாணியம்மாள் கூறிய வரலாற்றில் முற்றிலும் ஆழ்ந்து, தனது முழுமனதையும் அதிலேயே செலுத்தி இருந்தமையாலும், கண்மணியம்மாள் அவளது முதுகுப்பக்கத்தில் உட்கார்ந்து இருந்தமையாலும் அந்த மடந்தையின் பரமசங்கட மான நிலைமையை அவள் கவனிக்காதவளாய் கல்யாணியம் மாளை நோக்கி, “பிறகு இந்தக் கூத்து எப்படித்தான் முடிந்தது என்று ஆவலோடு கேட்க, கல்யாணியம்மாள், “அது எப்படி முடிய வேண்டுமோ அப்படியே முடிந்தது. உடனே நான் கட்டிலை விட்டுக் கீழே இறங்கி மிகவும் கோபத்தோடு அவனை நோக்கி, “அடே நாயே! மரியாதையாக வெளியில் போகிறாயா? வேலைக்காரனை கூப்பிட்டு கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளச் சொல்லட்டுமா? ஆகா! அவ்வளவு கொழுப்பா உனக்கு! யாரடா வேலைக்காரன்?” என்று கூறி வேலைக்காரனைக் கூவியழைக்க, அதற்குள் பையன் வெளியில் நழுவிவிட்டான்; போனபோது அவன் மிகவும் வெட்கித் தலையைக் கீழே குனிந்து கொண்டு போனானாகிலும், தான் ஏதோ செய்து விடுவதாக முணுமுணுத்துப் பெளரஷம் கூறிக் கொண்டே போயிருக்கிறான். அவன் கேவலம் மூடத்தனம் நிறைந்த அறியாத பையன் ஆகையால் அவனை நாம் சரிசமானமாக மதித்து அவனது விஷயத்தில் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்வது ஒரு கொசுவை உலக்கை கொண்டு அடிப்பதைப் போலாகும். ஆகையால், என்னுடைய வேலைக்காரர்களுக்கு கூட நான் இதைச் சொல்ல வில்லை. ஆனால், நம்முடைய சொந்தக்காரர்களுடைய வீடுகளிலும், சிநேகிதர்களுடைய வீடுகளிலும், அவன் சிறு பெண்களிடம் பழகுவதற்கு இனிமேலாவது இடங்கொடுக்காமல் தடுத்துவிட வேண்டும். ஏனென்றால், அவன் சும்மா இருக்க மாட்டான்” என்று கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/213&oldid=649658" இலிருந்து மீள்விக்கப்பட்டது