பக்கம்:மதன கல்யாணி-1.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 229

என்ற நினைவினால் அவளது உடம்பு அவமானத்தினாலும் வெட்கத்தினாலும் அப்போதே குன்றியதன்றி, அவளது மனோதைரியமும், எடுப்பான சொல்லும் ஒடுங்கிப் போய், முற்றிலும் தளர்வும், நடுக்கமும், ஆவலும், கவலையும், அச்சமும் உண்டாயின. அந்த நிலைமையில், அவள் அவரை அழைத்துக் கொண்டு தனது அந்தப்புரத்தை அடைந்து, ஒரு சோடாவில் உட்கார்ந்து கொள்ளும் படி அவரை உபசரிக்க, அவர் அப்படியே உட்கார்ந்து கொள்ள, அவரது வாயிலிருந்து என்னவிதமான செய்தி வரப்போகிறதோ என்ற பெருத்த ஆவலோடும் பிதியோடும் அவரது முகத்தில் வைத்த தனது விழியை வாங்காமல் உற்று நோக்கி, “விசேஷம் என்ன? சீக்கிரம் சொல்லும். அது இன்னதென்பது தெரியாமையால், என் மனம் நிரம்பவும் பாடுபடுகிறது” என்றாள்.

அதைக் கேட்ட சிவஞான முதலியார் தமது சட்டைப் பையில் இருந்த சுதேசமித்திரன் பத்திரிகை ஒன்றை எடுத்த வண்ணம் அவளை நோக்கி, “இது இன்றைய சுதேசமித்ரன் பத்திரிகை; நீங்கள் என்னுடைய ஜாகைக்கு வந்திருந்த போதே இந்தப் பத்திரிகை வந்திருந்தது. ஆனால் நான் இதை அப்போது பிரித்துப் பார்க்காமல் வைத்திருந்தேன். நீங்கள் புறப்பட்டு வந்த பிறகு போஜனத்தை முடித்துக் கொண்டு தாம்பூலம் போட்டுக் கொண்டு இதைப் பிரித்துப் பார்த்தேன். இதில் ஒரு விபரீதமான சங்கதி வந்திருக்கிறது; இது நமக்கு சம்பந்தப்பட்ட விஷயம் என்பது நிச்சயமாகத் தெரிவதால் இதை உங்களிடம் காட்டி இதற்குத் தக்கபடி முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஓடி வந்தேன். இதோ இந்த விஷயத்தைப் படியுங்கள்” என்று கூறிய வண்ணம் அந்தப் பத்திரிகையைப் பிரித்து நீதிஸ்தலம் என்ற தலைப்பின் கீழ் இருந்த ஒரு பாகத்தை மடக்கியபடி அவளிடம் நீட்ட, அவள் நெருப்பின் மேல் இருப்பவள் போலப் பதறிய வண்ணம், “நீங்களே படியுங்கள்; என்னிடம் கொடுப்பதேன்” என்று கூறினாள். அவளது உடம்பும், கைகளும், கால்களும் அப்போது கட்டுக்கடங்காமல் வெடவெட என்று நடுங்கின. அச்சத்தினால் உச்சி முதல் உள்ளங்கால் வரையில் வியர்வை குபிரென்று பொங்கி எழுந்தது. அவளது சொல்லைக் கேட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/247&oldid=649723" இலிருந்து மீள்விக்கப்பட்டது