பக்கம்:மதன கல்யாணி-1.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 மதன கல்யாணி

12-ம் அதிகாரம்

புதிய மருமகள்

பெட்டி வண்டிக்குள் இருந்த சிவஞான முதலியாரும், கல்யாணியம்மாளும் வண்டி இரண்டொரு மயில் தூரம் செல்லும் வரையில் ஒருவரோடு ஒருவர் பேசாமல் முற்றிலும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர். அந்த அபாயகரமான பெருத்த தீங்கில் இருந்து மைனரை எப்படித் தப்புவிக்கலாம் என்பதைப் பற்றியே சிவஞான முதலியார் யோசனை செய்திருந்தார். கல்யாணியம்மாளது மனதோ முற்றிலும் கலக்கமும் குழப்பமும் துன்பமும் சஞ்சலமும் நிறைந்ததாய், சொல்லொணா வகையில் வதைப்பட்டுக் கொண்டிருந்தது. தாம் மறுநாள் நிச்சயதார்த்தம் ஏற்படுத்தி பெரிய மனிதர்களான பலரை அழைத்திருக்க, அப்பேர்ப்பட்ட சந்தர்ப்பத்தில் மைனர் நிரம்பவும் தலைகுனிவான பெருத்த சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டது சகிக்க இயலாத விசனகரமான நிகழ்ச்சியாக இருந்ததன்றி, அது ஒரு பெருத்த அபசகுனமாகவும் தோன்றியது. மதனகோபாலனது விஷயத்தில் தான் செய்த பெருத்த சதியே தனக்கு அத்தகைய மீளாத்துன்பமாக வந்து நேர்ந்து விட்டது என்னும் என்ணம் அடிக்கடி அவளது மனத்தில் எழுந்து அவளைக் கண்டித்து ஈட்டியால் குத்துவது போல அவளது மனதை வதைத்துப் புண்படுத்திக் கொண்டிருந் தது. இருந்தாலும், மைனர் மரண தண்டனை முதலியவற்றில் இருந்து தப்பித்து வரவேண்டுமே என்ற கவலையும், தப்பி வரா விட்டால், ஏராளமான செல்வமும் செல்வாக்கும் தாயாதிகளுக்குப் போய்ச் சேர்ந்துவிடுமே என்ற பேரச்சமும் அவளது மனத்தை முற்றிலும் கவர்ந்து கொண்டமையால் மதனகோபாலனது விஷயம் மறைந்து மறைந்து நினைவிற்கு வந்து கொண்டிருந்தது. அந்த விஷயத்தில் எத்தனை லட்சம் ரூபாய் செலவு செய்ய நேர்ந்தாலும், அதை இலட்சியம் செய்யாமல், பணத்தை வாரி இறைத்து போலீசாரையோ, அல்லது, பாலாம்பாளையோ, அல்லது, இருவரையுமோ சரிப்படுத்தி, மைனரை அன்று இரவு அந்த வண்டியிலேயே அழைத்து வந்துவிட வேண்டும் என்ற உறுதியே கல்யாணியம்மாளது மனதில் வேரூன்றி நின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/252&oldid=649735" இலிருந்து மீள்விக்கப்பட்டது