பக்கம்:மதன கல்யாணி-1.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 251

மெத்தையில் புதைத்த வண்ணம் படுத்திருந்தாள். போலீசார் மைனருக்கு விலங்கிட்டு அவனை வெளியில் அழைத்துப் போன சமயத்தில் கிழவர் அவர்களைப் பின் தொடர்ந்து பங்களாவின் வாசல் வரையில் போய், அங்கே மூர்ச்சித்துக் கிடந்தவர்களை மோட்டார் வண்டியிலே வைத்து அனுப்பிவிட்டு, மேன் மாடத்துக்குத் திரும்பி வருவதற்குள், அவள் தனது கொண்டை ஊசியை எடுத்து தான் படுத்திருந்த இடத்திற்கு அடியில் மெத்தையைக் கிழித்து அதற்குள் மைனரது பத்திரத்தைச் சொருகி, மேலே துப்பட்டியை விரித்துவிட்டு முன் போலப் படுத்திருந்தாள்.

திரும்பவும் அங்கே வந்த கிழவர் அவளுக்கருகில் மெத்தை மீது உட்கார்ந்திருந்து, அவளது முகத்தைத் தடவி, சைத்தியோபசாரம் செய்து பொழுது விடியும் வரையில் மிகுந்த துன்பமும் கவலையும் கொண்டவராக இருந்து, மறுநாள் காலையில் பிரேதங்களை சோதனை செய்வதற்காக போலிசாரோடு வந்த டாக்டரைக் கொண்டு பாலாம்பாளுக்கு ஒளவுதம் கொடுக்கும்படி செய்தார். அவர் பத்து முறை அவளை அழைத்தால், அவள் கிணற்றிற்குள் இருந்து பேசுகிறவள் போல மிகவும் மெலிந்து தளர்ந்து போன குரலாகப் பேசி, பெருத்த பாசாங்கு செய்து கொண்டிருந்தாள். ஆனால் உண்மையில் அவளது மனத்தில் பல வகையான எண்ணங்கள் எழுந்து வதைத்துக் கொண்டிருந்தன; கிழவரது நட்பு தனக்கு வேண்டுமானால், மைனரைத் திருடன் என்று தான் கட்டாயமாகச் சொல்லியே தீர வேண்டியிருந்தது. ஆனால், மைனரோ, பெருத்த பணக்காரனாக இருப்பதன்றி, எழுத்து மூலமாகத் தன்னிடம் ஒழுங்காக அகப்பட்டுக் கொண்டிருந்தான் ஆதலால், கிழவரிடத்தில் இருந்து தனக்குக் கிடைக்கும் பொருளைவிட, அபாரமான செல்வத்தை அவனிடம் பறித்து விடலாம் என்ற நினைவும், தான் பெருத்த சமஸ்தானத்தின் ஜெமீந்தாரிணி ஆகிவிடலாம் என்ற நினைவும் எழுந்து இடை யிடையில் அவளது மனதைக் கலைத்தன. ஆனால் மைனரால் எழுதிக் கொடுக்கப்பட்ட பத்திரம் செல்லுமோ, செல்லாதோ, செல்லாவிடில், தனது கதி அரசனை நம்பிப் புருஷனை விலக்கின வளது கதி போலாகுமோ என்ற ஐயமும் தோன்றி வதைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/269&oldid=649772" இலிருந்து மீள்விக்கப்பட்டது