பக்கம்:மதன கல்யாணி-1.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் . 255

நியாயம் வரக்கிடைக்காத இப்பேர்ப்பட்ட பெரிய மனிதர்களுக்கு மரியாதை செய்யாமல் இந்த உடம்பை அப்படியாவது நான் காப்பாற்ற வேண்டுமோ தக்க பிரபுக்களான தாங்கள் இருவரும் கேவலம் நாடகம் ஆடுகிற தொழிலுள்ள என்னை ஒரு பொருட்டாக மதித்து இவ்வளவு தூரம் வந்ததையே நான் என்னுடைய பூர்வ ஜென்ம புண்ணியமாக நினைக்க வேண்டும். என்னுடைய உடம்பு மாத்திரம் சரியான நிலைமையில் இருக்கும் போது தங்களை வரவேற்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருந் தால், நானே ராஜபாட்டைக்கு ஓடி வந்து, மரியாதை செய்து தங்களை அழைத்து வந்திருப்பேனே” என்று கூறிய வண்ணம் தட்டித் தடுமாறி மெதுவாக எழுந்து கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள். அவளது பரிபக்குவமான யெளவனத்தையும், கண்களையும், மனத்தையும் ஒருங்கே கொள்ளை கொள்ளும் கட்டமுகையும், அருமையான நற்குண நல்லொழுக்கத்தையும், எதிர்பாராது கண்ட கல்யாணியம்மாள் பெரிதும் திகைப்பும் வியப்பும் அடைந்து, “ஆகா இப்படிப்பட்ட அற்புத சிங்காரியான பெண்மயிலாள் நாடக மேடையில் தோன்றி இனிமையாகப் பாடி நடித்தால், உலகைத் துறந்த தபசிகள்கூட அவசியம் தங்களுடைய மனவுறுதியை இழந்து விடுவார்கள் என்பது நிச்சயம்; அப்படி இருக்க, மைனர் இவளுடைய வலையில் வீழ்ந்தது ஒர் ஆச்சரியம் அல்ல” என்று தனக்குள்ளாக நினைத்துக் கொண்டவளாய், அவளது சொல்லழகிலும் பல்லழகிலும் ஈடுபட்டு அவளது வதனத்தை உற்று நோக்கிய வண்ணம் இருந்தாள். சிவஞான முதலியாரோ முன்னிலும் அதிகக் குழைவாக பாலாம்பாளை நோக்கி, “என்ன குழந்தாய்! நிரம்பவும் படித்த பெண்ணான நீ கூட இப்படி பேசுகிறாயே! மனிதர் திருடக்கூடாது; பொய் சொல்லக் கூடாது; வேறே எந்தத் தொழிலைச் செய்தால் என்ன. முக்கியமான சங்கதி, நாணயமான வழியில் ஜீவனம் செய்ய வேண்டியது அவசியமானது. நீ நாடகத்தில் சேர்ந்திருந்தால், அதனாலேயே உனக்கு ஒர் இழிவு உண்டாகி விடுமா? மனிதருக்கு பணத்தின் மிகுதியாலும், அவர்கள் செய்யும் தொழிலினாலுமா மரியாதை ஏற்ப்டுகிறது? மனிதருடைய நற்குணத்துக்கும் நல்ல நடத்தைக்கும் தக்கபடியே பெருமையும் சிறுமையும் ஏற்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/273&oldid=649781" இலிருந்து மீள்விக்கப்பட்டது