பக்கம்:மதன கல்யாணி-1.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 279

ஜாதியும் வேண்டாம், கலியாணமும் வேண்டாம். இயற்கையாக நம்முடைய மனம் எந்த விஷயத்தை நாடுகிறதோ, அதை நாம் பூர்த்தி செய்வதே உத்தமம் என்று நான் எண்ணுகிறேன். ஆகையால், மைனர் உனக்கு எழுதிக் கொடுத்திருக்கிற பத்திரத்தை நீ ஜாக்கிரதையாக வைத்துக் கொள். அவனுடைய தாயாராகிய நானும் போஷகர்களுள் ஒருவராகிய இந்த ஐயாவும் இதற்குச் சம்மதிக்கிறோம். இன்னொரு போஷகர் இருக்கிறார்; அவரும் இதற்குச் சம்மதிக்கும்படி நான் செய்கிறேன். கலியாணம் நடந்து ஏற்பட்ட மருமகளைக் காட்டிலும் நூறு மடங்கு சிறந்த அருமையான மருமகளாக உன்னை நான் இன்று முதல் பாவிக்கிறேன். உனக்கு இந்தப் பத்திரம் ஒன்றே போதுமான ஆதாரம். உனக்கு இரண்டு லட்சம் ரூபாய் அல்லவா நஷ்டம் உண்டாயிற்று. இந்தக்ஷணம் முதல், என்னுடைய சமஸ்தானம் முழுதிற்கும் நீயே எஜமானியாக இருந்து, இரண்டு லட்சமல்ல இருபது லட்சம் ரூபாய் வேண்டுமானாலும் நஷ்டஈடு செய்து கொள்; சம்மதம். இனி உன்னுடைய இஷ்டப்படியே நாங்கள் எல்லோரும் நடந்து கொள்ளுவோம் என்பதை நீ உறுதியாக நம்பலாம்” என்று மிகவும் குழைவாகவும் அன்பாகவும் பேதம் பாராட்டாமல் மிகவும் அன்னியோன்னியமாக நெருங்கி விட்டவள் போலவும் பேசினாள். பாலாம்பாள் அப்படிப்பட்ட பிரஸ்தா பத்தையே எதிர்பார்த்தாள் ஆனாலும், அதை எதிர்பாராதவள் போல சிறிது வியப்பும் திகைப்பும் காட்டி, குழப்பம் அடைந்தவள் போல திரும்பவும் தனது நெற்றியைப் பிடித்துக் கொண்டு கீழே குனிந்த வண்ணம் இரண்டொரு நிமிஷ நேரம் யோசனை செய்தவளாய், மிகுந்த நாணம் அடைந்தவள் போல நடித்து மெதுவாக நிமிர்ந்து, புன்னகை செய்து, “நீங்கள் கேட்டுக் கொள்வதற்கு, இன்னவிதமான மறுமொழி சொல்வதென்பது எனக்குத் தோன்றவில்லை. ஏனென்றால், இப்படிப்பட்ட காகிதக் கலியாணம் நடப்பதும், இவ்விதமான மருமகள் ஏற்படுவதும் இப்படிப்பட்ட பிரஸ்தாபம் செய்வதும் உலகத்திலேயே இது வரையில் நடக்காத காரியங்கள் ஆகையால், இதற்கு இணங்குவதா, அல்லது இதை மறுப்பதா என்பது எனக்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/297&oldid=649828" இலிருந்து மீள்விக்கப்பட்டது