பக்கம்:மதன கல்யாணி-1.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 மதன கல்யாணி

எங்கும் ஒரு மனிதராகிலும் காணப்படாதிருந்தனர். உலகமே மூர்ச்சை ஒடுக்கி யோகாப்பியாசம் செய்ததோ என்னலாம்படி எங்கும் நிச்சப்தம் குடிகொண்டிருந்தது. மரம், செடி, புல், பூண்டு, விலங்கு, பறவைகள் முதலிய யாவும் இரவாகிய போதையில் ஆழ்ந்து உணர்வற்றுக் கிடந்தன. நாய்கள் குரைப்பதும் ஒடுங்கிப் போயிருந்தது. உலகத்தில் உள்ள சகல கோடி ஆன்மாக்களும், எவரது பாதுகாப்பும் இன்றி நிராதரவாகத் துயில்கின்றனவே என்று நினைத்துக் கவலை கொண்டு நட்சத்திரங்களாகிய பாராக்காரர்கள் விழித்த கண் மூடாமல் மிகுந்த எச்சரிக்கையோடு காவல் புரிந்திருக்க, பெட்டி வண்டி மாத்திரம் சென்று கொண்டிருந்தது. அவ்வாறு சென்று கொண்டிருந்த வண்டி கலெக்டர் பங்களாவுக்கு அப்பால் உள்ள பெருத்த ஏரியின் பக்கமாக வந்த போது, படேரென்று குதிரையின் முகத்தில் ஒர் அடி விழுந்தது. அதே நிமிஷத்தில் வண்டிக்காரனது தலைமீது ஒர் அடி விழ, அவன், “அப்பாடா” என்று வீரிட்டுக் கொண்டு பாட்டையில் வீழ்ந்து விட்டான். குதிரை அடியைப் பொறுக்க மாட்டாமல் துள்ளிக் குதித்து, வண்டியைச் சடேரென்று பின்னால் தள்ளிய வண்ணம் நின்று விட்டது. அதற்குள் வண்டியின் கூண்டிலும், பக்கத்தில் இருந்த பலகைகளிலும், மழை பெய்வது போல, மூங்கில் தடிகளின் அடிகள் தடதடவென்று வந்து விழுந்தன. உள்ளே இருந்த கல்யாணியம்மாளும்; சிவஞான முதலியாரும் பெருந்திகில் கொண்டு நடுங்கி, அன்றோடு தங்களுக்கு முடிவு காலம் வந்துவிட்டது என்று நினைத்த, மூலைகளில் பதுங்கிய வண்ணம், “யாரப்பா அடேய்! எங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம். எங்களிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து விடுகிறோம். அடிக்க வேண்டாம் அடிக்க வேண்டாம்” என்று கூச்சலிட்டு அலற, கையில் பெருத்த மூங்கில் தடிகளோடு பனை மரங்கள் போல நின்ற இரண்டு திருடர்கள், வண்டியில் இருந்த லாந்தரில் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு “சரி, எறங்கு கீளே! ஒண்னுகூட பாக்கி இல்லாமெ, எல்லாத்தியும் போடு இப்பிடி! வாயைக் கீயை தொறக்கப்போறெ, அத்தோடே மண்டைப்பூச்சு மாண்டுபூடும்” என்று அதட்டிய வண்ணம், கதவைத் திறந்துவிட, சிவஞான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/308&oldid=649851" இலிருந்து மீள்விக்கப்பட்டது