பக்கம்:மதன கல்யாணி-1.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 297

வெளிப்படுத்தியதும், பெருத்த இடிகளாக அவளது மனதைத் தாக்கின. அவள் அதே ஏக்கமாக இருந்து வருத்தி ஊணுறக்கம் இன்றி மன மறுகிச் சேர்ந்து கிடந்தாள். அதன் காரணம் இன்ன தென்பதை உணர்ந்தவளான மீனாகூஜியம்மாள் பலவகையில் அவளுக்கு நற்புத்தி புகட்டி அவளை அன்போடு தேற்றி வந்த தன்றி, சிலமாத காலத்தில் அவள் மதனகோபாலனை மறந்து விடுவாளென எண்ணியிருந்தாள். -

அந்தச் சந்தர்ப்பத்திலேயே மறுநாள் பிற்பகலில் கல்யாணி யம்மாள் அவர்களது பங்களாவிற்கு வந்து சேர்ந்து, புண்ணில் கோலிடுவது போல கண்மணியம்மாளைச் சித்திரவதை செய்து விட்டுப் போய்ச் சேர்ந்தாள். அந்தச் சீமாட்டியும் மீனாகூஜியம் மாளும் மதனகோபாலனைப் பற்றிக் கூறிய அத்தனை சொற்களும், அத்தனை வாள்களைப் போலவும், வேல்களைப் போலவும் அவளது இருதயத்தைத் துளைத்துக் கொண்ட சென்றன. மதனகோபாலனது துர்நடத்தையைப் பற்றி அவர்கள் சொன்ன விஷயங்களையும், மறுநாள் தனக்கும் மைனருக்கும் நிச்சயதாம்பூலம் மாற்ற வேண்டும் என்று அவர்கள் முடிவு கட்டியதையும் கேட்கவே கண்மணியம்மாள் சித்தப்பிரமை கொண்டவள் போலானாள். அவளது மூளை குழம்பியது; சிரமோ சுழன்றது. கரைகடந்த துக்கமும், அழுகையும் வெள்ளமாகப் பொங்கி எழுந்தன. அடக்க இயலாத விதம் மகா உக்கிரமாகப் பொங்கி எழுந்த மனவெழுச்சியால், அவளது மார்பு படீரென்று வெடித்து விடும்போல இருந்தது. அவள் தனது வேதனைகளைச் சொல்லின் மூலமாகவேனும் அழுகையின் மூலமாகவேனும் வெளிப்படுத்தலாம் என்பதற்கும், கல்யாணியம்மாளுக் கெதிரில் தான் அவ்வாறு கேவலமாக நடந்து கொள்வது அவளுக்கு அவமானமாகத் தோன்றியது. அந்த நிலைமையில் அவ்விடத்தை விட்டு எழுந்து போய்விடலாமா என்ற ஓர் எண்ணமும் அவளது மனதில் எழுந்தது. ஆனால், தான் அப்படிச் செய்வதைப் பற்றி கல்யாணியம்மாள் ஏதேனும் சந்தேகம் கொள்வாளோ என்று நினைத்து, சொல்லில் அடங்கா நரக வேதனை அனுபவித்தவளாய் அந்த மடமங்கை வேதனைக் குவியலாக உட்கார்ந்திருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/314&oldid=649863" இலிருந்து மீள்விக்கப்பட்டது