பக்கம்:மதன கல்யாணி-1.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 307

ஆலமரத்தடிக்கு வந்து அதிக நேரம் காத்திருக்க எனக்கு அவகாசம் கிடைக்காது ஆகையால், காலந்தவறாமல் நீங்கள் அவசியம் வந்திருக்க வேண்டுமாக மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

இன்று நீங்கள் அங்கே வரமுடியாமற் போமானால், இன்று இரவு நான் இறந்து போய் விட்டேன் என்ற செய்தியை நீங்கள் நாளைய தினம் காலையில் அவசியம் கேட்பீர்கள். உங்களுடைய மனதுக்கும் பிடிக்காத ஒரு காரியத்தைச் செய்யும்படி நான் துணிந்து கேட்டுக் கொள்வதைக் குறித்து என்னை மன்னிக்கும்படி பன்முறையும் வேண்டுகிறேன். இந்தக் கடிதத்தின் எழுத்தைக் கொண்டே நான் யார் என்பது உங்களுக்கு எளிதில் தெரிந்து விடும் ஆகையால், இதை நான் கையொப்பம் இல்லாமல் அனுப்பி இருக்கிறேன்.

- என்று கண்மணியம்மாள் எழுதி அதை மடித்து, தனது இடைக்குள் பத்திரமாகச் சொருகிக் கொண்டவளாய், அப்படியே நாற்காலியில் சாய்ந்து சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த பின், எழுந்து தனது பஞ்சனையில் படுத்தவள் சிறிது நேரத்தில் துயிலில் ஆழ்ந்து விட்டாள்.

அவ்வாறு ஆழ்ந்தவள் மறுபடி தனது கண்களைத் திறந்து விழித்த போது காலை ஒன்பது மணி நேரம் ஆகியிருந்தது. தனது கட்டிலிற்கருகில் சிறிது தூரத்தில் மிகவும் கடுகடுத்த முகத்தோடு மீனாகூஜியம்மாள் நின்று கொண்டிருந்தாள். எப்போதும் சந்தோஷத் தையே காட்டும் தனது அத்தையின் வதனம் அன்று மிகுந்த கோபத்தைக் காட்டியதைக் கவனிக்க, கண்மணியம்மாளது மனதில் பெருத்த திகில் உண்டாகிவிட்டது. தான் எழுதி மடியில் வைத்திருந்த கடிதம் நழுவிக் கீழே விழுந்து, ஒருகால், மீனாகூஜியம் மாளது கையில் அகப்பட்டிருக்குமோ என்ற ஐயமும் கவலையும் உண்டாகி விட்டன. ஒரே நொடியில் அந்த மடமங்கையின் தேகம் கிடுகிடென்று ஆடிப்போய் விட்டது. கையுமெய்யுமாகப் பிடிபட்ட கள்வனைப் போல ஒன்றும் பேசமாட்டாமல் தத்தளித்தவளாய், மிகவும் பாடுபட்டுத் தனது சங்கடங்களை மறைத்துக் கொண்ட கண்மணியம்மாள் சயனத்தை விட்டிறங்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/324&oldid=649884" இலிருந்து மீள்விக்கப்பட்டது