பக்கம்:மதன கல்யாணி-1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மதன கல்யாணி

‘கஞ்சிடை யமிழ்தங் கூட்டி நாட்டங்க ளான வென்னச் செஞ்சவே நீண்டு மீண்டு சேயரி சிதறித் தீய வஞ்சமுங் களவு மின்று மழையென மதர்த்த கண்கள் அஞ்சன நிறமோ கண்ணன் வண்ணமோ அறிதல் தேற்றாமல்”

என்று, கள்ளம், கபடம் முதலிய எத்தகைய குற்றங்களுக்கும் இடமின்றிக் கூர்மையான புத்தியையும், மேன்மைக் குணங்களை யும், பரிசுத்தமான மனத்தையும் வெளிப்படுத்தின.

இவ்வாறு உச்சி முதல் உள்ளங்கால் வரையில் உள்ள ஒவ்வோர் அங்கமும் மகா சிரேஷ்டமாக அமைந்திருந்தது. அத்தகைய தனிச் சிறப்பு வாய்ந்த வானுலகத்து மங்கையான மோகனாங்கி நாடக மேடையில் குயில் போலப் பாடி மயில் போல ஆடி அன்ன நடை நடந்து கிள்ளை போல மொழிந்து தனக்கிணை தானே என நடித்து, ஜனங்களின் மீது மோகனாஸ்திரப் பிரயோகம் செய்து, அவர்களது மதியை மயக்கிப் பித்தராக்கி பிரமிக்கச் செய்தாள். அங்கே கூடியிருந்த கிழவர் முதல் சிறுகுழந்தை வரையில் உள்ள சகலரும் கலங்கிப் போய் திக்பிரமை கொண்டு தடுமாறினர். தாங்களே அழகில் சிறந்தவர் என்று அதுகாறும் நினைத்து செருக்குற்று இருந்த பெண்டீர் யாவரும் திகைத்து நெடுமூச்செறிந்தனர். அவளே யாவரிலும் மேம்பட்ட ரதிதேவி என்ற நினைவை அத்தகைய மகளிர் தங்களது மனதிற்குள்ளாயினும் கொள்ள நேர்ந்தது. முன் வரிசையில் உட்கார்ந்திருந்த துரைராஜாவும், மாரமங்கலம் மைனரும் தேன் குடித்த நரிகள் போல மதியிழந்து அறிவிழந்து மோகா வேசங்கொண்டு எப்படியாகிலும் அவளது நட்பைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற உறுதியை முன்னிலும் அதிகமாகக் கொண்டவர்களாய் இருந்தனர். அங்கிருந்த ஆண்பாலார் ஒவ்வொருவரும் அத்தகைய துராசை கொண்டனர் என்றே கூறவேண்டும். ஆனால் அங்கே ஒரு மூலையில் இருந்த வீணை வித்துவானான மதனகோபாலன் ஒருவனே அத்தகைய துராசை கொள்ளாமல், மோகனாங்கியின் மேம்பாடுகளைப் பற்றி உண்மையான பெருமையும், ஆனந்தமும் அடைந்தவனாய் அவளிடத்தில் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/38&oldid=649904" இலிருந்து மீள்விக்கப்பட்டது